Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங் மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நியமனத்தில் தனது கைகள் கட்டப்பட்டுவிட்டது என்று ஊடகங்கள் முன்பு ஒப்புக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் நீடிப்பது இந்திய அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகும் என்று ஜெயலலிதா  கூறியுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் தேசிய பிரச்சினைகள் குறித்து ஊடகங்களுடன் கலந்துரையாடிய போது, கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்தும் விவகாரங்களை சமாளிப்பதில் திறம்பட செயல்பட முடியாத தன்னுடைய பரிதாபகரமான இயலாமையை, திரும்பத் திரும்ப ஒப்புக்கொண்டது, அவருடைய கையாலாகாத்தனத்தையே எடுத்துக் காட்டியது. தன்னுடைய அரசின் பெரும்பாலான தோல்விகளுக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்ட சமரசங்கள் தான் காரணம் என்பதை தனது உரையாடலின் போது  சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தார் டாக்டர் மன்மோகன் சிங். 

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இமாலய ஊழலை நிகழ்த்தியவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஏற்கெனவே ஆளாகியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைக்கப்பட்ட போது,  ஆண்டிமுத்து ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, தன்னுடைய விருப்பப்படி அமைச்சரவையில் ராசா நியமனம் செய்யப்படவில்லை என்றும், கூட்டணிக் கட்சியின் நிர்ப்பந்தம் தான் அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். தன்னுடைய அமைச்சரவையில் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமரிடத்தில் தான் இருக்கிறது என்று இந்திய அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.  குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து தனது கட்சியின் தலைவருடனும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்து ஆலோசிப்பதில் தவறில்லை. ஆனால், மத்திய அமைச்சரை தெரிந்தெடுப்பதில் தனக்கு எந்தவித பங்கும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் தன்னுடைய கைகள் கட்டப்பட்டுவிட்டன என்றும் ஊடகங்கள் முன்பு பாரதப் பிரதமர் பதவியில் இருப்பவர் ஒப்புக் கொண்டிருப்பது இந்திய அரசியல் சாசனத்தையே முற்றிலும் அவமதிப்பது போல் உள்ளது. விலையுயர்ந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை முதலில் வருபவருக்கு முதலில் வழங்குவது என்ற கொள்கையின் அடிப்படையில் லெட்டர் பேடு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் வகையில் பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை ராசா எடுத்த போது மவுனம் சாதித்தது குறித்து எழுப்பப்பட்ட வினாவிற்கு, இது தொடர்பாக தன்னுடைய கவலைகளை தெரிவித்து ராசாவுக்கு கடிதம் எழுதியதாக டாக்டர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.  ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முற்றிலும் வெளிப்படையான முறையில் நடப்பதாகவும், தான் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிக்கு முரணாக எதுவும் நடக்காது என்றும், எந்தத் தவறுக்கும் இடமில்லை என்றும் ராசா உறுதி அளித்தார் என்று பாரதப் பிரதமர் குறிப்பிட்டார்.  

ராசா அளித்த உறுதியின் அடிப்படையில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நாட்டின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டதை பாரதப் பிரதமர் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார். இந்த நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தனக்குத் தெரியாது என்று பொருளாதார நிபுணரான டாக்டர் மன்மோகன் சிங் நிச்சயமாக சொல்லியிருக்கக் கூடாது. இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, நாட்டின் சொத்து சுரண்டப்படுவதை தடுத்து இருக்க வேண்டும்.  ஆனால், கூட்டணி தர்மம் என்கிற தெளிவற்ற காரணத்தைக் காட்டி, வாய்மூடி மவுனியாக இருந்துவிட்டார் பாரதப் பிரதமர்.  இது தான் இன்று இந்தியா எதிர்கொண்டிருக்கின்ற வருத்தம் தோய்ந்த உண்மை நிலை. 

தன்னுடைய அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியாததோடு மட்டுமல்லாமல், எல்லை மீறி பிரச்சினைகள் செல்லும் போதும் அதில் தலையிட முடியாத ஒருவரை நாம் பாரதப் பிரதமராக பெற்றிருக்கிறோம்.  எஸ். பாண்ட் அலைக்கற்றையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒதுக்கியது, காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி சங்க ஊழல் போன்ற கூட்டணி தர்மத்திற்கு தொடர்பில்லாத வினாக்களுக்கும் திருப்திகரமான பதில்களை பாரதப் பிரதமர் தரவில்லை. மொத்தத்தில், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் ஊடகங்களுடனான நேரடி கலந்துரையாடல் என்பது வெடிக்காத பட்டாசு போல் புஸ்வானமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், அவலமானதாகவும் இருந்தது. 

இதன் மூலம் கூட்டணி தர்மம் என்ற எளிதில் உடையக்கூடிய கண்ணாடி போன்ற பலவீனமான கேடயத்தை பயன்படுத்தி, இந்த நாட்டை தொற்றிக் கொண்டிருக்கிற அனைத்து நோய்களையும் மூடி மறைக்கும் மனோதிடமற்ற, முதுகெலும்பில்லாத பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago