எகிப்தில் தொடர்ந்து வன்முறை: 36 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 கெய்ரோ, ஜூலை. 8  - எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முகமது மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறையில் 36 பேர் உயிரிழந்தனர். ஆயிரம் பேர் காயமடைந்தனர். ராணுவத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முகமது மோர்ஸியை மீண்டும் அதிபராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசூதிகளில் தொழுகை முடிந்து ஆயிரக்கணக்கானோர் வன்முறையில் இறங்கினர். 

தலைநகர் கெய்ரோவில் மோர்ஸி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள குடியிருப்பை நோக்கி அவரின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்றனர். ராணுவ ஆட்சியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில்  4 பேர் உயிரிழந்தனர். 

தாஹ்ரீர் சதுக்கத்தில் நிகழ்ந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். அலெக்ஸாண்ட்ரியா நகரில் மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு சினாய் நகரில் நிகழ்ந்த வன்முறையில் 5 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுவரை மொத்தம் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே மோர்ஸியின் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

எகிப்தில் ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் முகமது மோர்ஸியை அதிபர் பதவியில் அமரவைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: