2ஜி: தயாளு அம்மாள் மனுவை உடனடியாக விசாரிக்க மறுப்பு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.9 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாளு அம்மாள் மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுத்துவிட்டது. ரூ.1.80 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று தயாளு அம்மாளுக்கு ஏற்கனவே சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி உத்தரவிட்டிருந்தார். தமக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்ய உடல்நிலை இடம் தராது. அதனால் தமக்கு நேரடியாக கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தயாளு அம்மாள் சார்பாக அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, தயாளு அம்மாளுக்கு கண்டனம் தெரிவித்தது. வழக்கை வேண்டுமென்றே காலதாமதப்படுத்த செய்யும் நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று நீதிபதி மீனா பீர்பால் சாடியிருந்தார். 

இந்தநிலையில் தயாளு அம்மாளுக்கு டெல்லி சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு விதித்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையொட்டி தயாளு அம்மாள் சார்பாக நேற்று சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மறுத்துவிட்டது. உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அறிவித்துவிட்டதோடு நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது. தயாளு அம்மாள் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நேற்றுடன் முடிவடைந்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: