இஷ்ரத் என்கவுன்ட்டரில் சிக்கிய ஐபி அதிகாரி: திக்விஜய்சிங்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.12 -  குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் சிக்கிய ஐபி அதிகாரி ராஜேந்திர குமார், பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நரேந்திர மோடி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங். இஷ்ரத் வழக்கு என்ன? 2004ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகரில் மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல ஊடுருவிய தீவிரவாதிகள் என்று போலீசார் கூறினர். ஆனால் இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, நடந்தது போலி என்கவுன்ட்டர் என்று கூறியதுடன் 4 பேரையும் ஒரு அறையில் அடைத்து வைத்து பின்னர் சுட்டுக் கொன்றதாகவும் கூறியது. மேலும் இந்த வழக்கில் மத்திய உளவு அமைப்பான ஐபியில் பணிபுரியும் ராஜேந்திர குமாருக்கும் தொடர்பு இருப்பதால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியது சிபிஐ.     இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் புதிய சர்ச்சையை விதைத்து விட்டிருக்கிறார். அவர் தனது பேட்டியில், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய ராஜேந்திரகுமார், பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கெளசல் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் (மிசோரம்) ஆளுநராக இருந்த போது நெருக்கமானவராக இருந்தார் என்பது உண்மை இல்லையா? ஐபி அதிகாரியாக அகமதாபாத்தில் அத்வானி அமைச்சராக இருந்தபோது நியமிக்கப்பட்டது உண்மை இல்லையா? அப்போது அகமதாபாத் போலீஸ் அதிகாரியாக இருந்த ஜி.எல்.சிங்கால் சிபிஐயிடம் அளித்த வாக்குமூலத்தில் குஜராத் போலீசார் போலி என்கவுன்ட்டர் நடத்த ராஜேந்திர குமார் உதவினார் என்பது உண்மை இல்லையா? அதனால்தான் நரேந்திர மோடி ஒரு கதாநாயகனார்... தீவிரவாத செயல்களை செய்பவர்களே முஸ்லிம்கள்தான் என்று மக்களின் மனதிலும் பதியப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: