பீகாரில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை. 19  - பீகாரில் மதிய உணவை சாப்பிட்டதால் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா அருகே நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 80 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்து விட, 20 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்தனர். உணவில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததாலேயே இந்த கொடிய மரணங்கள் நேர்ந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தைகளில் மேலும் 5 பேர் நேற்று முன்தினம் இறந்து விட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த எண்ணிக்கையில் மேலும் இரு குழந்தைகள் சேர்க்கப்படவில்லை என்று சம்பவம் நடந்த கிராமத்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த துயர சம்பவத்தின் நினைவாக, அனைத்துக் குழந்தைகளின் உடல்களையும் தர்மாசதி கண்மான் கிராமத்திலேயே புதைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதற்கிடையே, பலியான குழந்தைகள் படித்த பள்ளியின் முதல்வர் மீனா தேவி தலைமறைவாகி விட்டார். அவரது கணவர் நடத்தும் மளிகைக் கடையிலிருந்துதான் மதிய உணவு சமைக்கத் தேவையான பொருட்கள் மற்றும் எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெயில் மருந்து வாடை அடிப்பதாக சமையல் பணியாளர் பள்ளி தன்னிடம் கூறியும் அதிலேயே சமைக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: