முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு: தமிழக அரசு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 24 - முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கு உரிமை உண்டா? என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் எழுப்பியது. முல்லை பெரியாறு ஆறு தமிழகம் வழியே ஓடுவதால் உரிமை உண்டு என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து கேரளா அரசும் வழக்கு தொடர்ந்தது. இதில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்த போதும் இதை பின்பற்றாமல் இருக்க தனிச்சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. 

இதைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது. ஆர்.எம்.லோதா தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகள் எச்.எல்.தத்து, மதன்.பி.லோகூர், எம்.ஒய்.இக்பால், சந்திரமெளலி குமார் பிரசாத் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, 1886 ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் இந்திய அரசு இடையேதானே ஒப்பந்தம் போடப்பட்டது. அப்படியானால் தமிழகம் எப்படி முல்லைப் பெரியாறு அணையில் உரிமை கோர முடியும் என்று 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கேள்வி எழுப்பியது. மேலும் தமிழக அரசு சரியான புள்ளி விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதிகள் புகார் கூறினர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லைப் பெரியாறு ஆறு தமிழகத்தின் வழியே ஓடுகிறது. 1935 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் உரிமை கோர முடியும் என்று வாதிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: