விசா கோரி மோடி விண்ணப்பித்தால் பரிசீலனை: அமெரிக்கா

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.26 - குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வர விசா கோரி விண்ணப்பித்தால் அதுபற்றி பரிசீலனை செய்யப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி அயோத்தியில் கரசேவை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டுவிட்டு சபர்மதி ரயிலில் கரசேவகர்கள் திரும்பிக்கொண்டியிருந்தனர். ரயிலானது குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டியிருந்தபோது சில விஷமிகள் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் கரசேவகர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் இனக்கலவரம் வெடித்தது. இதில் ஏறக்குறைய ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் குறைந்துவிட்டது என்று காங்கிரசார் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் அமெரிக்கா பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுவதற்காக முதல்வர் மோடிக்கு அழைப்பு வந்தது. இதை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் மோடிக்கு விசார வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. 

இந்தநிலையில் பாரதிய ஜனதா தேர்தல் பிரசார குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டிருப்பதால் தேசிய அளவில் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஒருவேளை மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடித்தால் மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவில் மோடிக்கு விசா கிடைக்க பலவழிகளிலும் முயற்சிகள் செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் இருந்து 65 எம்.பி.க்கள் அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் மோடிக்கு விசாக கொடுக்கக்கூடாது என்று அந்த எம்.பி.க்கள் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை இடது கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மறுத்து உள்ளனர். 

இந்தநிலையில் விசா கோரி மோடி விண்ணப்பித்தால் அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் பிசாகி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மோடிக்கு விசா வழங்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த பிசாகி, மோடி விசா கோரி விண்ணப்பித்தால் அவருக்கு விசா கொடுப்பதற்கு தகுதி இருக்கிறதா என்பது குறித்து அமெரிக்க விதிமுறைகளின் படி பரிசீலனை செய்யப்படும் என்றார்.

இதற்கிடையில் வாஷிங்டன்னில் 3 நாள் பயணத்தை முடித்துள்ள ராஜ்நாத் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மோடிக்கு விசா வழங்குவது குறித்து தாம் எந்த முயற்சியும் செய்யவில்லை என்றார். இது அமெரிக்க அரசின் வேலை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: