பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு

petrol-price-hike1

புதுடெல்லி,மே.15 - நாட்டில் பெட்ரொல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி எண்ணெய் கம்பெனிகள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. இந்தியாவில் டீசல்,பெட்ரோல், சமையல் கியாஸ், மண்ணெண்ணெய் ஆகியவைகள் தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முடியவில்லை. காரணம் பூமியில் போதிய அளவு எண்ணெய் வளம் இல்லாததுதான். இதனால் தேவையை பூர்த்தி செய்ய சர்வதேச சந்தையிலும் அரபு நாடுகளிலும் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து அதை சுத்தகரித்து விநியோகிக்கப்படுகிறது. அதனால் சர்வதேச சந்தை விலைக்கேற்றவாறு உள்நாட்டிலும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 95 டாலருக்கும் மேலாக விலை உயர்ந்துவிட்டது. அதனால் உள்நாட்டிலும் விலை உயர்த்தப்படுகிறது. ஆனால் பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தாமல் வேறு வழிகளில் வருவாய் மத்திய அரசு பெருக்கலாம். அதை செய்யாமல் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திடீர் திடீர் என்று பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்தது. இதனால் மக்களிடையே வெறுப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த மத்திய அரசு எண்ணெய் விலையை உயர்த்தும் பொறுப்பை எண்ணெய் கம்பெனிகளிடம் ஒப்படைத்துவிட்டது. இதனையொட்டி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 வீதம் எண்ணெய் கம்பெனிகள் உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் விலை 8 தடவைகள் உயர்த்தப்பட்டன. முதலில் டீசல் விலையைத்தான் உயர்த்த இருந்ததாக தெரிகிறது. கடைசி நேரத்தில் இது மாற்றப்பட்டு பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலையும் விரைவில் கூட்டப்படும் என்று தெரிகிறது. தமிழகம், கேரளம், புதுவை, அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாளே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.61.48 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ