அமெரிக்காவை வாட்டும் பனிப்புயல்: குளிருக்கு 21 பேர் பலி

Image Unavailable

 

வாஷிங்டன், ஜன - 10 - கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மேற்கு அமெரிக்கப் பகுதியில் நிலவும் கடும் குளிருக்கு 21 பேர் பலியாகியுள்ளனர். அண்டார்டிக் துருவப் பிரதேசத்தை விட கடும் குளிர் நிலவுவதால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்க்டிக் வெடிப்பு எனப்படும் பனிப்புயல் அமெரிக்காவை கடந்த சில நாட்களாக வதைத்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது.அமெரிக்காவின் 50 மாகாணங்களும் உறைநிலைக்குக் கீழான தட்ப வெட்ப நிலையில் உள்ளன. மக்கள் வீட்டைவிட்டு வெளியேற இயலாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹவாய், பிர்மிங்ஹம், அலாபாமா, அட்லாண்டா, நாஸ்வில்லே, டென்னிஸி, லிட்டில்ராக், அர்கான்சாஸ், வாஷிங்டன் என அனைத்துப் பகுதிகளிலும் மிகக் கடுமையான குளிர் நிலவுகிறது. சிகாகோவில் -24 டிகிரி செல்சியஸ் அளவுக்கும், செயின்ட் லூயிஸ் பகுதியில் மைனஸ் 25.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் குளிர் பதிவாகி இருந்தது.

சாலைப் போக்குவரத்து பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ளது. உணவுக் கையிருப்பு குறைந்து கொண்டுள்ளது. இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூன்று ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் இரவு முழுவதும் உதவியின்றித் தவித்தனர்.

குளிர் சார்ந்த பாதிப்புகள் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், இல்லினாய்ஸ் மாகாணத்தில் 7 பேரும், இன்டியானா பகுதியில் 6 பேரும் அடங்குவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ