முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா வழங்க மோடியை சந்திக்க அமெரிக்கா தூதர் முடிவு

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.12 - 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதகலவரத்தை காரணம் காட்டி அம்மாநில முதல் -மந்திரி நரேந்திர மோடிக்கு 2005ம் ஆண்டு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது.

அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளும் மோடிக்கு விசா வழங்க மறுத்தன. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பல தடவை வேண்டுகோள் விடுத்தும் அமெரிக்கா தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இந்த நிலையில் குஜராத்தில்  தொடர்ந்து 4 தேர்தல்களில் மோடி வெற்றி பெற்றார். அதோடு கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை.  இதையடுத்து இங்கிலாந்தும், ஐரோப்பிய நாடுகளும் மோடிக்கு விசா வழங்க சம்மதித்தன. அமெரிக்கா மட்டும் கடந்த 9 ஆண்டுகளாக நரேந்திர மோடிக்கு விசா வழங்கவில்லை. ஆனால் தற்போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி முன் நிறுத்தப்பட்டிருப்பது அமெரிக்காவை யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் அலை வீசுவதை தன் உளவுத்துறை மூலம் அமெரிக்கா அறிந்துள்ளது. மோடி பிரதமராக வாய்ப்பு உருவாகி இருப்பதால் அமெரிக்கா தன் கொள்கை முடிவை மாற்ற தீர்மானித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல், நரேந்திர மோடியை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார். இதை அமெரிக்க தூதரகம் உறுதி செய்தது. இந்த மாத இறுதியில் அமெரிக்க தூதர் நான்சி பாவெல் ஆமதாபாத் சென்று மோடியை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. அவர்களது சந்திப்புக்கான தேதி பற்றிய விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியா - அமெரிக்கா நட்புறவை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த சந்திப்புக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்கும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களுடன் இருந்த உறவில் கசப்புணர்வு ஏற்பட்டதால் அமெரிக்கா தன் நிலையை மோடி நோக்கி திருப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்