முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவரை இழந்த இலங்கை தமிழ் பெண்களுக்கு இந்தியா உதவி

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு,ஜூன்.4 - இலங்கையின் கிழக்கு பகுதியில் விடுதலை புலிகளுடனான சண்டையின் போது கணவனை இழந்த பெண்களுக்கு இந்தியா சார்பில் ரூ. 20.3 கோடி மதிப்பிலான உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்குமான சண்டை கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. அதற்கு முன்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சண்டையில் கிழக்கு பகுதியில் மட்டும் குறைந்த பட்சம் சுமார் 49 ஆயிரம் பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. வட பகுதியில் சண்டையால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் சண்டையால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் விதவைகளுக்கு உதவ இந்தியா முன் வந்துள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் அசோக் கே. காந்தா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, போரால் கணவனை இழந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வழிவகை செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த நிதி உதவி திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் வாழ்வாதாரத்திற்கான வழிவகைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த உதவி திட்டம் மிகவும் முக்கியமானது. இந்த திட்டம் அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும். கிழக்கு பகுதியின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த இந்தியா இந்த உதவிகளை செய்கிறது. இதன்படி மட்டக்களப்பில் சமுதாய பயிற்சி மையம் மற்றும் வர்த்தக மையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசுடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த உதவித் திட்டம் இலங்கையின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சண்டையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தியா அளித்து வரும் மறு சீரமைப்பு பணிகளுக்கான உதவிகளின் தொடர்ச்சியே இந்த உதவி திட்டமாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony