முக்கிய செய்திகள்

இலங்கை மீது பொருளாதார தடை: சீமான் வலியுறுத்தல்

Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.14 - தமிழகத்தை போல இலங்கை மீது பொருளாதார தடைக்கு புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இயக்குனர் சீமான் கூறினார். திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் இயக்க தலைவருமான சீமான் நேற்று புதுவை வந்தார். அவர் முதல்வர் ரங்கசாமியை திலாஸ்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தார். அப்போது தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றதற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர் சிறிது நேரம் அவர் ரங்கசாமியுடன் தனியாக பேசிக் கொண்டிருந்தார். இதன் பின்னர் இயக்குனர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரசுக்கு எதிராக சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நான் பிரச்சாரம் செய்தேன். அதுபோல புதுவையிலும் பிரச்சாரம் செய்தேன். தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதற்காக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். 

தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை புதுவை அரசும் சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டுக் கொண்டேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

சீமானுடன் நாம் தமிழர் இயக்க புதுவை மாநில அமைப்பாளர் கலைச்செல்வன், தலைவர் தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். 

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு புதுவை அண்ணா சிலை அருகே தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை இயக்குனர் சீமான் வாழ்த்தி பேசினார். 

அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் சீமான் பேசியதாக அவர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுவை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.  இதற்காக சீமான் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு நீதிபதி மாலா ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: