கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு விரைவில் முடிவு - உதயகுமார்

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      அரசியல்
udayac

 

மதுரை,பிப்.27  - வரும் சட்டசபை தேர்தலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஊமச்சிகுளத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.முருகேசன் தலைமை வகித்தார். மதுரை கிழக்கு தொகுதி கழக செயலாளர் மா.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மதுரை மாநகர் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும் மாநில மாணவரணி செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை எந்தவித ஆரவாரமும் ஆடம்பரமும் இல்லாமல் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள். அம்மா என்றால் கருணை, தர்மம் போன்றவையாகும். அரசியலுக்கு ஜெயலலிதா வருவதற்கு முன்பே ஏழை எளியோருக்கு உதவி செய்யும் கருணை உள்ளம் படைத்தவர். கலைத்துறையில் அவர் இருந்தபோதும் சீன யுத்தம் வந்தபோதும் ராணுவ யுத்த நிதிக்காக தான் அணிந்திருந்த நகைகளை அப்போது பிரதமராக இருந்தவரிடம் வழங்கினார். ஆனால் கருணாநிதியோ ஒரு குண்டூசியை கூட யாருக்கும் கொடுத்தது கிடையாது. தமிழகத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா, விலைவாசி உயர்வு இல்லாமல் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட்டு தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வழிநடத்திச் சென்று பொற்கால ஆட்சியை தந்தார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று கருணாநிதியின் கோரப்பிடியில் சிக்கி தமிழக மக்கள் நித்தம் நித்தம் மரண பயத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இவற்றையெல்லாம். கருணாநிதி கண்டுகொல்லாமல் கோடி கோடியாக ஊழல் செய்து கொள்ளையடித்து வருகிறார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் செய்து மத்திய அரசின் கஜானாவை காலியாக்கி கருணாநிதியின் கஜானாவுக்கு மாற்றியுள்ளார் மாஜி மந்திரி ஆ.ராசா. இதைப்பற்றி மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் போர்க்குரலால் இந்த ஊழல் மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டது. அதன் பின் இந்திய தலைமை கணக்கு அதிகாரி, உச்சநீதிமன்றம் கண்டித்ததின்பேரில் ராசா, வேறுவழியின்றி கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவர் கொள்ளையடித்த பணத்தை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கைப்பற்றவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட கருணாநிதி, கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இது மிக விரைவில் நடைபெறும். 

தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி அறிவித்துள்ள இலவச திட்டங்கள் அனைத்தும் ஒரு மோசடி திட்டமாகும். இந்த இலவச திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது. அதிலும் இந்த இலவசங்கள் அனைத்தும் தி.மு.க.வினர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. வேறு எந்த முக்கிய திட்டங்களையும் கருணாநிதி செயல்படுத்தவில்லை. கருணாநிதியின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் இன்று 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 15 ஆயிரம் கடன் சுமை உள்ளது. இதுதான் கருணாநிதியின் கபட ஆட்சியின் நிலையாகும். அதேநேரத்தில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை எண்ண முடியாது. ஆற்று மணலை கூட எண்ணி விடலாம். கருணாநிதியின் குடும்பம் சுருட்டியுள்ள சொத்துக்களை எவ்வராலும் எண்ணி சொல்லிவிட முடியாது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தை கருணாநிதி குறுக்கு வழியில் கைப்பற்றி தன்னுடைய கடும்ப சொத்தாக்கிவிட்டார். இதனை நாட்டு மக்களும் அவரது தொண்டர்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எனவே வரும் சட்டசபை தேர்தல் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்டும் தேர்தலாக அமையும். இந்த தேர்தலோடு கருணாநிதி நாட்டை விட்டே ஓடி விடுவார். மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று இன்றைக்கு மக்களே பேசி வருகிறார்கள். எனவே மீண்டும் ஜெயலலிதாவின் தலைமையில் புனித ஆட்சி மலர நாம் அனைவரும் அவரது பிறந்த நாளில் அயராது பாடுபட வேண்டும் என சூளூரை ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் காசிமாயன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் ஜி.கருப்பணன், மாணவரணி இணை செயலாளர் கே.பி.பூமிநாதன், ஒன்றிய இணைச்செயலாளர் கருணாமூர்த்தி, ஒன்றிய பேரவை செயலாளர் மலையாளம், வக்கீல் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: