முக்கிய செய்திகள்

மங்களூர் விமான விபத்து: குடும்பத்தினருக்கு நஷ்டஈடு

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      வர்த்தகம்
Image Unavailable

 

கொச்சி, ஜூலை 21 - மங்களூரில் கடந்த ஆண்டு நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் தலா ரூ. 75 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு துபாயில் இருந்து மங்களூருக்கு 158 பயணிகள் மற்றும் 8 விமான சிப்பந்திகள் ஆகியோருடன் வந்த ஏர் இந்தியா விமானம் மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையின் அருகில் இருந்த ஒரு குன்றின்மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 166 பேரும் பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த விமானத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம்  தலா ரூ. 20 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. இந்த நஷ்டஈடு போதாது என்று இந்த விமானத்தில் பயணம் செய்து பலியான முகமது ரஃபி என்ற 24  வயது இளைஞரின் பெற்றோர் அப்துல்சலாம், ரம்லா ஆகியோர் கொச்சி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தங்களது மகன் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டில் உயர்ந்த சம்பளத்தில் வேலை பார்த்ததாகவும், இளம் வயதிலேயே இந்த விமான விபத்தில் பலியானதாலும் தங்களது மகனின் மரணத்திற்கு இழப்பீடாக ரூ. 1.5 கோடி வழங்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். இந்த மனு மீது ஐகோர்ட்டு நீதிபதி பி.ஆர்.ராமச்சந்திர மேனன் விசாரணை நடத்தினார். விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு மிக குறைவாக இருக்கிறது என்றும், இந்த நஷ்டஈட்டை அதிகரித்து தரவேண்டும் என்றும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் தலா ரூ. 75 லட்சம் நஷ்டஈட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் அந்த தொகையை இன்னும் ஒரே மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: