முக்கிய செய்திகள்

மும்பை நகரில் மிகப்பெரிய அளவில் நிலமோசடி - பா.ஜ.க

புதன்கிழமை, 2 மார்ச் 2011      ஊழல்
BJP

 

மும்பை, மார்ச் - 3 - மும்பையில் மிகப்பெரிய அளவில் நடந்துள்ள நில மோசடியை கண்டுபிடித்து வெளிக்கொண்டுள்ளோம். இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு ஒன்று அடுத்தவாரம் தொடரப்போவதாக பாரதிய ஜனதா அறிவித்துள்ளது. மும்பையில் ஆதர்ஷ் சொசைட்டி சார்பாக கார்கில் வீரர்களுக்கு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் சவாண் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் மும்பையில் மேலும் மிகப்பெரிய அளவில் நிலமோசடி நடந்திருப்பதாகவும் அதை நாங்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு ஒன்று தொடரப்போவதாகவும் பாரதிய ஜனதா அறிவித்துள்ளது. மும்பை நகரில் 235 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் மிகவும் குறைந்த விலைக்கு 6 கட்டிடக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் மத்திய மாநில அரசுகள் மற்றும் ராணுவத்திற்கு சொந்தமான இடமாகும். இந்த இடத்தை முன்னாள் முதல்வர் அசோக் சவாண்தான் வழங்கினார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் கிரீத் சோமைய்யா நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இது தொடர்பாக அடுத்தவாரம் எங்கள் கட்சி சார்பாக மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்படும் என்றும் சோமைய்யா தெரிவித்தார். இந்த நிலத்தை பெற்ற கட்டிடம் கட்டும் தொழிலில் உள்ள 6 பேர் ரூ. 31 ஆயிரத்து 500 கோடி வரை லாபம் அடைந்துள்ளனர் என்றும் ராஜீவ் காந்தி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிலத்தை அரசு ஏதேச்சதிகாரமட்டுமல்லாது சட்டவிரோதமாகவும் ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் சோமைய்யா குற்றஞ்சாட்டினார். இந்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி வீட்டு வசதித்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதில் முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கும் தற்போதைய முதல்வர் பிரித்விராஜ் சவாணுக்கும் சரி பங்கு உள்ளது என்றும் சோமைய்யா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: