முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்குக சட்டசபையில் சரத்குமார் வேண்டுகோள்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 17 - முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் என்று சட்டபேரவையில் சரத்குமார் வேண்டுகோள் வைத்தார். சட்டசபையில் விவசாய மான்ய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:- கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2500 முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன். அத்துடன் வெட்டுக் கூலியையும், வண்டி வாடகையையும், கரும்பு மில்லே ஏற்றுக்கொள்ள வேண்டுமென, தமிழக முதல்வரை வேண்டுகிறேன். தோட்டக்கலைத்துறை மூலம் 2011-12 ஆம் ஆண்டில் 400 ஏக்கர் பரப்பில் ரூ.65.92 லட்சம் செலவில் மூங்கில் சாகுபடி செய்ய திட்டமிட்டிருப்பது வருங்காலத்தில் காகித தொழிற்சாலைகளுக்கு உதவியாக அமையும்.
மாதவரம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ரூபாய் ஐந்து கோடி 93 லட்சம் செலவில் புதிய அலங்கார, செயல் விளக்கத் தோட்டமும், குற்றாலத்தில் ஐந்து கோடியே 92 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் பூங்காவும் ஏற்காட்டில் ஏழு கோடியே 45 லட்சம் செலவில் தாவரவியல் பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
குற்றாலத்தில் உருவாக்கப்படும் சுற்றுச்சூழல் பூங்கா பணியினை  விரைந்து முடித்துத் தருமாறு தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, மாவட்ட வாரியாக, எத்தனை குடும்பங்களுக்கு, எத்தனை ஏக்கர், அரசு தரிசு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மைத்துறை அமைச்சர்  தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மக்காச்சோளம், மனித உணவுத்தேவையில் 25 சதவீதமும், கோழித் தீவனத்தில் 49 சதவீதமும், கால்நடை தீவனத்தில் 12 சதவீதமும் பங்களிக்கிறது. மக்காச்சோள உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 6-ம் இடத்தில் உள்ளது. மக்காச்சோளம் பயிரிட 2011-12-ம் ஆண்டில் 96.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த கால அளவில், குறைந்த தண்ணீரில் விளையக் கூடியது மக்காச்சோளம். எனவே அதிகப்படியான விவசாயிகள் மக்காச் சோளத்தை, பயிரிட அரசு   ஊக்குவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தென்னை காப்பீட்டுத் திட்டத்தை வேலூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி முதலிய 11 மாவட்டங்களில் செயல்படுத்த  உள்ளதாக விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தென்னை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ கொப்பரைக்கு 69 ரூபாய் வரை கிடைத்தது. இப்போது ஒரு கிலோ 54 ரூபாயாக குறைந்துவிட்டது. எனவே, தேங்காய் கொப்பரை விலை ரூ.60  ரூபாய்க்கு குறையாமல் இருக்குமாறு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மஞ்சள் ஒரு குவிண்டால் ஏறத்தாழ 15 ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது. விவசாயிகள்  கடுமையான  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். மஞ்சளுக்கு நியாயமான விலை கிடைக்க அரசு ஆவன செய்திட வேண்டும்.
பேரிச்சை சாகுபடி, தமிழ்நாட்டில் உகந்ததாக இருக்குமா என்பதை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்து, தருமபுரி, புதுக்கோட்டை போன்ற வறட்சி மாவட்டங்களில் பேரிச்சை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கிட ஆவணசெய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்