முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்கும் வாய்ப்புக்கே இடமில்லை:-குரேஷி

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 5 - தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகம்,புதுவை, கேரளம், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனால் இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதில் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்னர் இந்த 5 மாநிலங்களிலும் வரும் மே மாதம் 13-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதற்கு மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சியான அ.தி.மு.க. உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. அதனையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வும் ஆரம்பமாகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு அடுத்து கல்லூரி தேர்வும் நடக்கவுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இரவும் பகலும் தேர்வுக்காக படித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரம் நடக்கவுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது மோட்டார் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி பிரசாரம் செய்ய வேண்டும். அப்போது ஏற்படும் சத்தத்தால் மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு அவர்கள் படிப்புக்கு தடையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ்புத்தாண்டு தினமாகும். அன்றைய தினத்தை கொண்டாட உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். இதனையொட்டி இடம் பெயரும்போது தேர்தலின்போது மக்கள் சரியானபடி வாக்களிக்க முடியாமல் போய்விடும். இதை பயன்படுத்தி வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடுதல் மற்றும் தில்லுமுள்ளு நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக்த்தில் தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதற்கு தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்டசபை காலம் மே 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. மே மாதம் 13-ம் தேதிதான் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. மே.16-ம் தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இடைவெளி இருப்பதோ வெறும் இரண்டு நாட்கள்தான். இந்த இரண்டு நாட்களுக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு அவர்கள் முதல்வரை தேர்ந்தெடுத்து, கவர்னரையும் சந்திக்க வேண்டும். இதற்கு போதிய காலவகாசம் இருக்காது. அதனால் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி கோரியுள்ளார். 

இடது கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., பா,ஜ. தலைவர்களும் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பின்னரே தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரே கட்சி ஆட்சி செய்கிறது. இதையும் பரிசீலைனை செய்துதான் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

இந்தநிலையில் இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் எஸ்,ஒய். குரேஷி நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்று குரேஷி கூறினார். தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் நிலவும் சூழ்நிலை குறித்து தேர்தல் கமிஷன் பலமுறை விரிவான முறையில் ஆராய்ந்தது. அதன் பின்னர்தான் கடந்த செவ்வாய்கிழமை தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஒவ்வொன்றையும் பல முறை உட்கார்ந்து தெளிவாக ஆய்வு செய்து கணக்கில் கொண்டோம். அதேமாதிரி இதர மாநிலங்களான அசாம், மேற்குவங்காளம், புதுவை,கேரளம் ஆகிய மாநிலங்களிலும் அனைத்தையும் ஆய்வு செய்து கணக்கில் எடுத்துக்கொண்டோம். அதன் பின்னர்தான் தேர்தல் நடத்தப்படும் தேதியை அறிவித்தோம். அதனால் முதலில் அறிவித்த தேதியிலேயே தேர்தல் நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்று குரேஷி தெரிவித்தார். 

தேர்தல் தேதியை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த குரேஷி தேர்தலை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்பே இல்லை என்று சட்டென்று பதில் அளித்தார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis