முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே உடல்நிலை - டாக்டர்கள் கவலை

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.28 - வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இருந்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 12-வது நாளாக நீடித்த நிலையில் அவரை கவனித்துவரும் டாக்டர்கள் அவரது உடல்நிலை குறித்து பெரும் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உண்ணாவிரதம் நடந்துவரும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் டாக்டர் நரேஷ் திரிகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியஅவர், அன்னா ஹசாரேவின் உடல்நலம் குறித்து நாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளோம். அவரது ரத்தக்கொதிப்பு குறைந்து வருகிறது. அவரது உடல் எடை மேலும் குறைந்துவிட்டது என்று தெரிவித்தார். ஏற்கனவே அன்னா ஹசாரேவின் உடல் எடை 7 கிலோ குறைந்துவிட்டதாக செய்திகள் வெளியானது தெரிந்ததே. தற்போது மேலும் அவரது உடல் எடை குறைந்துள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். அன்னா ஹசாரேவிற்கு வயது 74. இந்த தள்ளாத வயதிலும் அவர் எப்படி தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார் என்று டாக்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் வியப்பு தெரிவிக்கிறார்கள். இருப்பினும் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக டாக்டர் திரிகான் தெரிவித்தார். 

அவரை கவனிக்க கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரது ரத்த மாதிரி ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை நான் சாகமாட்டேன் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். வலிமையான லோக்பால் மசோதா கோரி தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். என்னுடைய போராட்டம் ஜன் லோக்பால் மசோதாவுக்காகத்தான். அது நிறைவேறும் வரை என் போராட்டம் தொடரும். இந்த உண்ணாவிரதத்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படாது. மக்கள் ஆதரவு என்ற சக்தி எனக்கு கிடைத்து வருகிறது என்றும் 74 வயதான அன்னா ஹசாரே தெரிவித்தார். சுமார் 5 நிமிடம் மக்களைப் பார்த்து பேசிய அவர், மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன். இந்த நாட்டுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டேன்  என்றும் கூறினார். இந்த போராட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் என்னோடு இருக்கிறார்கள் என்றும் அவர் பூரிப்புடன் தெரிவித்தார். இதனிடையே அவரது குழுவினர் அரசுடன் பேச்சுநடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பாராளுமன்றத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony