முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கறிஞராக பொறுப்பேற்க கோபால் சுப்பிரமணியம் மறுப்பு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 22 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பொறுப்பேற்க மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்கி உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. அரசு தரப்பு வழக்கறிஞராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இது தொடர்பாக தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த வழக்கை கையாள்வதற்கு மாசற்ற நேர்மையான ஆழ்ந்த சட்ட ஞானமுள்ள அரசு வழக்கறிஞர் தேவை. அப்பொறுப்பை ஏற்பவரின் முழு ஒப்புதல் தேவை. புது டெல்லியில் வழக்காடுபவர்கள் பெயரை மட்டும் பரிசீலிக்க கூடாது என்று தலைமை நீதிபதி லோதா குறிப்பிட்டார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தின் பெயரும் பரிசீலனைக்கு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக இவர் வாதாடியுள்ளார். இப்பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டவர்களிடையே இவரே முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் இப்பொறுப்பை கோபால் சுப்பிரமணியம் ஏற்க முடியாது என்று அவருடைய அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோபால் சுப்பிரமணியத்துக்கு பல்வேறு முக்கிய அலுவல்கள் இருப்பதால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்கவிருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராக முடியாதென அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான எம்.எல். சர்மா எனும் மூத்த வழக்கறிஞர், கோபால் சுப்பிரமணியத்தின் அலுவளகத்தை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது வேறு பல அலுவல்களை காரணம் காட்டி இவ்வழக்கை எடுத்து கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது. முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க நால்வர் பெயர்களை நீதிபதிகள் குழு பரிந்துரைத்தது. இதில் கோபால் சுப்பிரமணியம் தவிர மற்ற மூவரை நீதிபதிகளாக்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆட்சேபம் இருக்கவில்லை. இதையடுத்து நீதிபதி பதவிக்கு தன்னை பரிசீலிக்க வேண்டாம் என்று கோபால் சுப்பிரமணியம் தலைமை நீதிபதி லோதாவுக்கு கடிதம் எழுதினார்.

மேலும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உத்தேசத்துடன் மத்திய அரசு சிபிஐயை ஏவிவிட்டு ரகசிய விசாரணை நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை தொடர்ந்து இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக பொறுப்பேற்க அவர் மறுத்துள்ளார். தனது உச்சநீதிமன்ற பதவிக்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு சார்பாக வழக்கறிஞராக வாதாட அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony