முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதுங்கி இருக்கும் பாக். தீவிரவாதிகள்: முறியடிக்க ராணுவம் தயார்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 28 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்கு அப்பால் இந்தியாவில் நாச வேலைகளை நடத்தும் சதித் திட்டத்தோடு 200 பாக். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றால் அந்த ஊடுருவலை முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் ராணுவத்தினரும் சரி, பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சரி. நமது எல்லை பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் பகுதியில் ஊடுருவிய இவர்களை இந்திய ராணுவம் ஓட ஓட விரட்டியடித்தது. அந்த போரில் பாகிஸ்தானுக்கு படுதோல்வி ஏற்பட்டது. ஆனாலும் கூட பாகிஸ்தானுக்கு இன்னமும் புத்தி வரவில்லை. அவ்வப்போது எல்லை பகுதியில் ஊடுருவல் முயற்சிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் சில மாதங்களுக்கு முன் பதவியேற்றார். அப்போது இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இப்போதும் அதைத்தான் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் ராணுவமும் சரி, தீவிரவாதிகளும் சரி, இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதையும், தாக்குதல் நடத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அங்கு தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களை கொடூரமான முறையில் தாக்கினார்கள். இதில் அதிகாரிகள், பொதுமக்கள் என 160க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது நடந்த கடும் சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரே ஒருவன் மட்டும் பிடிபட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். இப்படி மும்பையில் கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள். அப்படிப்பட்ட இவர்களுக்கு இன்னமும் ரத்த வெறி அடங்கவில்லை போலும். இந்தியாவில் நாச வேலை நடத்தும் திட்டத்தோடு சுமார் 200 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கு அப்பால் பதுங்கி இருப்பதாக தற்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. இவர்கள் ஆயுதங்களுடன் எல்லைக்கு அப்பால் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது. ஒருவேளை இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினால் அந்த ஊடுருவலை முறியடித்து வெற்றி காண்போம் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு பக்கம் பேச்சு நடத்த துடிக்கும் பாகிஸ்தான், மறுபக்கம் நாசவேலைகளை நடத்தவும் திட்டமிடுவதுதான் வேதனைக்குரிய விஷயம். தீவிரவாதத்தை ஒழித்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இந்தியா பலமுறை எச்சரித்து விட்டது. ஆனால் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் உள்ளது. தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தும் கூட அமைதி பாதையில் அந்த நாடு இன்னமும் செல்லவில்லை. தீவிரவாதிகளை ஒடுக்கவும் பாகிஸ்தான் அரசு தயாராக இல்லை போலும். அதனால்தான் அவர்கள் இந்திய எல்லை பகுதியில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் சரி, இவர்கள் எத்தனை முறை ஊடுருவினாலும் சரி அவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகத்தான் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்