தீவிரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம்: ஒபாமா - கேமரூன்

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூபோர்ட்,செப்.6 - தீவிரவாதத்தால் எங்களை அடிபணிய வைத்துவிட முடியாது, நாங்கள் அடிபணிந்துவிடவும் மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அமெரிக்க பத்திரிகையாளர்கள் இருவரை ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை அறுத்து கொலை செய்ததுடன், அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதை குறிப்பிட்டு அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நேட்டோ தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒபாமா வேல்ஸுக்கு வந்துள்ளார். பிரிட்டனில் இருந்து வெளியாகும் டைம்ஸ் ஆப் லண்டன் பத்திரிகையில் ஒபாமாவும், கேமரூனும் கூட்டாக தலையங்கம் எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

நமது தகுதியையும், மதிப்பையும் காத்துக்கொள்வதற்காக நாம் தொடர்ந்து அஞ்சாமல் பணியாற்ற வேண்டும். நமது மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. நமக்காக மட்டுமின்றி உலக நன்மைக்காகவும் நாம் பாடுபட வேண்டியது உள்ளது. இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கவே நேட்டோ தலைவர்களின் கூட்டம் பிரிட்டனின் ஒரு பகுதியான வேல்ஸில் நடைபெறுகிறது. முன்னதாக வேல்ஸ் வந்த ஒபாமாவை கேமரூன் வரவேற்றார். பின்னர் இருவரும் அங்குள்ள பள்ளிக்கு சென்று சிறார் களுடன் கலந்துரையாடினர். உக்ரைன் பிரச்சினை குறித்து விவாதிக்கவே நேட்டோ தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பிற நேட்டோ நாடுகளின் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

உக்ரைனின் புதிய அதிபர் பெட்ரோ புரோஷென்கோவும் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் நாடு ஐரோப்பாவுக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்தார். உக்ரைன் ஐரோப்பாவுடன் நெருக்கம் காட்டுவதை ரஷ்யா விரும்பவில்லை என்பதும், ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் கிளர்ச்சியாளர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது. இவர்களுக்கு எதிராக நேட்டோ அதி விரைவு படையை களமிறக்க நேட்டோ தலைவர்கள் ஒப்புதல் அளிப் பார்கள் என்று தெரிகிறது.

ஐஎஸ் தீவிரவாதிகளால் அமெரிக்க பத்திரிகையாளர்கள் கொலை செய்யப் பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள புதிய தீவிரவாத அச்சுறுத்தலும் நேட்டோ தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப் பட்டாலும், அது நேட்டோ அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப் படுகிறது. பிரிட்டனில் இருந்தும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் இராக், சிரியா ஆகிய இடங்களுக்குச் சென்று ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளனர்.

தீவிரவாதிகள் குழுவில் இணைந்துவிட்டனர் என்ற சந்தேகம் ஏற்பட்டால்கூட அவர்களின் பாஸ்போர்டை பறிமுதல் செய்யும் அதிகாரத்தை போலீஸாருக்கு வழங்கும் சட்டத்தை கேமரூன் பரிந்துரைத்துள்ளார்.

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்று ஒபாமா அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பிரிட்டனும், பிரான்ஸும் இராக்கில் அமெரிக்கா நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் இணைவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: