முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர்களின் கலவரம் மாருதிகார் ஆலை காலவரையின்றி மூடல்

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

குர்கான், ஜூலை. - 21 - தொழிலாளர்களின் கலவரம் காரணமாக மாருதி கார் ஆலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.  டெல்லியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அரியானாவின் குர்கான் அருகே உள்ள மானேசரில் மாருதி சுசூகி கார் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஸ்விப்ட், டிசைர், ஏ. ஸ்டார் மற்றும் எர்டிகா கார்கள் தயாரிக்கப்படுகின்றன. 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். சம்பவத்தன்று இங்கு ஒரு தொழிலாளியை சூப்பர்வைசர் மோசமாக திட்டியதால் ஆத்திரமடைந்த தொழிலாளி சூப்பர்வைசரை அறைந்தாராம். இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தொழிலாளியை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இந்த தகவல் பரவி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோஷமிட்டனர். இதற்கு நிர்வாக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாம். உடனே தொழிலாளர்கள் பயங்கர வன்முறையில் இறங்கினர். இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து உயரதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது அந்த அரங்கத்துக்குள் கும்பலாக தொழிலாளர்கள் நுழைந்ததும் இரு தரப்பினருக்கும் அடிதடி ஏற்பட்டது. அதில் 40 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயம் அடைந்தனர். அலுவலகத்தின் ஒரு பகுதிக்கு சிலர் தீ வைத்தனர். தீ மளமளவென பரவியது. மறுபுறம் கண்ணில் பட்டதை பலர் அடித்து நொறுக்கினர். தகவலறிந்த 25 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இரவு 8 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. அப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிய நிலையில் ஒருவரது உடல் கண்டறியப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்த அதிகாரிகள் பலியானது மனிதவள பிரிவு பொதுமேலாளர் அவனிஷ்குமார் என்பதை உறுதி செய்தனர். காயமடைந்த 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குர்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். உயரதிகாரி அவனிஷ்குமார் பலியானதால் தொழிலாளர்கள் மீது கொலை முயற்சி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கர வன்முறை மோதல் காரணமாக தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மனேசர் மற்றும் குர்கானில் பதட்டம் நிலவுகிறது. இதற்கிடையே மாருதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த கலவரம் ஒரு நிறுவனத்தை பாதிக்கும் பிரச்சினையல்ல. முதலீட்டாளர்கள், வேலை தேடுவோரை இது பாதிக்கும். பல மாதங்களாக சுமூகமாக பணிகள் நடந்த நிலையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாக தெரிகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்களும் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட காலமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்