முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரிநீர் தேவைகுறித்த அறிக்கையை தாக்கல்செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 1 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச. - 1 - தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகியவை தங்களது தண்ணீர் தேவை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கு கடந்த 26 ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.கே. ஜெயின், லோகுர் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர். இதை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை நேரில் சென்று சந்தித்துப் பேசினார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. கர்நாடகத் தரப்பு, காவிரியில் நீர் திறந்துவிட மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காவிரி நதி நீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடகம் மறுத்து விட்டது என்று தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிரை காப்பாற்ற, டிசம்பர் 1 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 30 டி.எம்.சி தண்ணீர் தேவை என்று தமிழக அரசு தமது தரப்பு வாதத்தை முன் வைத்தது. ஆனால், தங்களுக்கு 78 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும் நிலையில் தங்களது அணைகளில் 37 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதாக கர்நாடக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள், தங்களது தண்ணீர் தேவை குறித்த அறிக்கையை சனிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந் நிலையில் தஞ்சாவூரில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். பின்னர் அனைவரும் கூட்ட அரங்கின் வாசலில் அமர்ந்து கர்நாடக அரசைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவப் பொம்மையை எரித்து தஞ்சாவூரிலிலும் சிதம்பரத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
நேற்று காலை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் முன்னர் குவிந்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மற்றும் விவசாயிகள், கர்நாடக அரசின் போக்கைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே போல சிதம்பரம் தெற்கு சந்நிதி தெரு முன்னர் கூடிய தமிழக உழவர் முன்னணி அமைப்பினர், ஷெட்டரின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்