முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020 ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசாக்குவோம் அண்ணா பல்கலை. மாணவர்கள் உறுதிமொழி

புதன்கிழமை, 29 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: 2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவை நிஜமாக்குவோம்’ என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த அப்துல்கலாமுக்கு நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி .அப்துல் கலாம் கடந்த திங்கட்கிழமையன்று மேகாலயா ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த செய்தி அறிந்ததும் நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியது.

ஜனாதிபதி பதவிக்கு பிறகு, அப்துல்கலாம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 11 மாதங்களாக சமுதாயத்திற்கான மாற்றம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளுக்கான கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மறைவையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் எம்.ராஜாராம் தலைமையில் அப்துல்கலாமின் உருவபடத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், ‘2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவை நிஜமாக்குவோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையின் முதல்தளத்தில் உள்ள 11-ம் எண் அறையில் அப்துல்கலாம் தங்கியிருந்தார். இதனால் விருந்தினர் மாளிகை வாசலில் அப்துல்கலாமின் உருவப்படம் வைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் தலைமை தாங்கி பேசும்போது, ‘‘மாணவர்களுக்கு நல்ல மாணவராகவும், விஞ்ஞானிகளுக்கு நல்ல விஞ்ஞானியாகவும், நிர்வாகிகளுக்கு நல்ல நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் அப்துல்கலாம். அவர் 11 மாதம் நம் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது. அவர் எப்போதும் மாணவர்கள் உயர்வுக்காகவே பாடுபட்டு வந்தார். அவருடைய மறைவு நமக்கு மட்டுமல்லாமல், நம் நாட்டுக்கே பேரிழப்பாகும்’’ என்றார்.

பல்கலைக்கழக துணை-பதிவாளர் பார்த்தசாரதி, கண்காணிப்பாளர் எபனேசர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அப்துல் கலாமின் உருவ படத்துக்கு மலர்களை தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும், ‘எங்கள் முன்னாள் மாணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான .அப்துல்கலாம் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்ற வாசகத்துடன் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து