அனைத்து இல்லங்களிலும் தனிநபர் கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் கலெக்டர் பொ.சங்கர் தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      நீலகிரி
31ooty-2

அனைத்து கிராமங்களிலும் தனிநபர் கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 2016_2017ம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில மேல்குந்தா, குன்னூர் ஒன்றியத்தில் பர்லியார் மற்றும் உபதலை, கோத்தகிரி ஒன்றியத்தில் ஜக்கனாரை, கூடலூர் ஒன்றியத்தில் சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஆகிய கிராம ஊராட்சிகளில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற ஊராட்சிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஆணைக்கிணங்க மேற்படி கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தும் பொருட்டு திட்டத்தினை செயல்படுத்தும் துறையான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் இத்திட்டத்தில் இணைந்துள்ள கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது-

ஒரு கிராம ஊராட்சியானது சுற்றுப்புறத்திலும், குக்கிராமத்தினை தனிநபர் இல்லக்கழிப்பறை அமைத்து அதனை முறையாக பராமரிக்கும் நிலையினை கொண்டதாகவும் ஏற்கனவே கட்டப்பட்ட கழிப்பறைகளை தவறாமல் பயன்படுத்தி அனைத்து கழிப்பறைகளும் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்யும் நிலையினை கொண்டதாகவும், அனைவரும் உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்னரும் மற்றும் கழிவறையை பயன்படுத்திய பின்னரும் கைகளைசோப்பினால் கழுவும் பழக்கத்தினை கொண்டவர்களாகவும், குடிநீரை முறையாக காய்ச்சி குடிக்கும் பழக்கத்தினை கொண்டவர்களாகவும், நிலத்தடி நீர், ஆறு மற்றும் ஓடை ஆகியவற்றில் மலம் கலப்பதால் நீர் ஆதாரங்கள் மாசுபடும் போக்கினை அறவே ஒழிக்கும் நிலையினை கொண்டிருந்தால் மட்டுமே 100 சதவீதம் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற கிராம ஊராட்சியாக மாறும்.

மேற்கண்ட கிராம ஊராட்சிகளில் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் தங்களது பங்களிப்பினையும் முழு ஒத்துழைப்பினையும் வழங்குவதோடு தங்கள் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரின் இல்லங்களிலும் தனிநபர் கழிப்பறைகள் கட்டினால் மட்டுமே 100 சதவீதம் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற கிராம ஊராட்சியாக மாற்ற முடியும்.  ஆகையால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் மேற்கண்ட ஊராட்சிகளில் 100 சதவீதம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதை உறுதி செய்திட கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் முழு முயற்சி எடுத்து பணியாற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட திட்ட இயக்குநர், செயற்பொறியாளர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட திட்ட அலுவலர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: