ஆஸ்திரேலிய நாட்டு ஆசிரியரை காதலித்து திருமணம் செய்த ஈரோடு பெண்

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி மைதிலி. இவர்களுக்கு மகிமா என்கிற மகளும், ராதேஷ் என்கிற மகனும் உள்ளனர். கிருஷ்ணன் கடந்த 1996-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடு அடிலேட் நகரத்துக்கு தனது குடும்பத்துடன் சென்று குடியேறினார். அங்கு உள்ள ஒரு கல்லூரியில் அவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் மகிமாவும், அவருடைய தம்பி ராதேசும் ஆஸ்திரேலியாவிலேயே தங்களது பள்ளிப்படிப்பை தொடர்ந்தனர்.மகிமா எம்.எஸ்சி பி.எச்டி. முடித்துவிட்டு அடிலேட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கெயித்-கயிலீன் தம்பதியின் மகனான பிரைன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக உருவெடுத்தது. இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு வீட்டினரும் சம்மதம் அளித்ததை தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது.

இந்து முறைப்படி திருமணம்

 இந்தநிலையில் மகிமாவின் திருமணத்தை இந்தியாவில் இந்து மத முறைப்படி நடத்த வேண்டும் என்று பெற்றோர்களும், உறவினர்களும் விருப்பப்பட்டனர். இதுதொடர்பாக பிரைன் குடும்பத்தினருடன்  எடுத்துக்கூறியபோது அவர்களும் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மகிமாவின் குடும்பத்தினர் மற்றும் பிரைன் குடும்ப உறவினர்கள் சுமார் 40 பேர் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்தனர்.பிரைன்-மகிமாவின் திருமண விழா இந்து மதம் பிராமணர் முறைப்படி ஈரோடு சோலார் கார்னீஷ் பார்க் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் காலை நடைபெற்றது. விழாவில் மணமகன் பிரைன் வேட்டி அணிந்தும், மணமகள் மகிமா சேலை அணிந்தும் இருந்தனர். பெங்களூரை சேர்ந்த பூசாரிகள் திருமண யாகம் வளர்த்தனர். அப்போது  செய்த சடங்குகள் குறித்து பிரைன் குடும்பத்தினருக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தனர்.

தமிழக உணவுவகைகள்

 பிரைனையும், மகிமாவையும் உறவினர்கள் தூக்கிக்கொள்ள மணமகளும், மணமகனும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். மணமகளின் தந்தை கிருஷ்ணன் மடியில் மகிமா அமர்ந்துகொள்ள பிரைன் நின்றபடி தாலி கட்டினார். பின்னர் அக்னி குண்டத்தை பிரைன்-மகிமா தம்பதியினர் 3 முறை சுற்றி வந்தனர்.  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து ஆடி மகிழ்ந்தனர்.திருமண விருந்தில் லட்டு, இட்லி, பூரி, பொங்கல் என தமிழக உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பிரைன் தனது மனைவி மகிமாவுக்கு உணவு ஊட்டினார். இதேபோல் மகிமாவும் பிரைனுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். மணமகனின் உறவினர்களும் தமிழக உணவை விரும்பி சாப்பிட்டனர். திருமணத்தில் பிரைனின் உறவினர்களும், நண்பர்களும் வேட்டி, சேலைகளை அணிந்து இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: