தி.மலை அண்ணாமலையார் கோவில் மகாகும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 6ந் தேதி நடைபெறவுள்ளது. இதையட்டி யாகசாலை பூஜைகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதனால் நேற்று முதல் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகாகும்பாபிஷேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 6ந் தேதி நடைபெறவுள்ளது. அதையட்டி அண்ணாமலையார் கோவில் மலர்கள், மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக துர்க்கையம்மன், பிடாரிஅம்மன், கணபதி வழிபாடுகள் நடந்து முடிந்தது. மேலும் கும்பாபிஷேகத்திற்கான தினசரி ஹோமம், பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான 108 யாகசாலை பூஜைகள் நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. கோவில் 5ம் பிரகாரத்தில் அம்மணி அம்மன்கோபுரம் அருகே 27 ஆயிரம் சதுர பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான யாக சாலையில் நேற்று காலை 9 மணிக்கு பூஜைகள் தொடங்கியது. யாக சாலை பூஜையில் 16 ஓதுவார்கள், 125 வேத விற்பன்னர்கள், 400 சிவாச்சாரியார்கள் பங்கேற்றுள்ளனர். கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட நதியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள புனித நீர் மற்றும் அண்ணாமலையார் கோவில் பிரம்ம தீர்த்த்ததில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீர் ஆகியவை யாக கலசங்களில் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படும். அதைத் தொடரந்து நாளை 2ந் தேதி கோவில் பிரகாரங்களில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 6ந் தேதி காலை 9.05 மணி முதல் 10.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. யாகசாலை பூஜை நேற்று தொடங்கியதையட்டி நேற்று காலை முதல் மகாகும்பாபிஷேகம் நடைபெறும்வரை அண்ணாமலையார் கோவில் கருவறை தரிசனம் இல்லை. பிம்மத்திலிருந்து கும்பத்தில் சுவாமி எழுந்தருள்வதால் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய இயலாது என கோவில் இணை ஆணையர் சி.ஹரிபிரியா தெரிவித்துள்ளார். யாகசாலை பூஜையை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பூஜை நடைபெறும் பகுதியில் தீயணைப்பு வாகனம், மருத்துவக்குழுவினருடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விழா முன்னேற்பாடுகள் குறித்தும் பாதுகாப்புகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி ஆகியோர் நேற்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: