முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் நம் மனநிலையை தீர்மானிக்கின்றன

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

உடல் நலமும் மன நலமும் சேர்ந்தது தான் முழுமையான ஆரோக்கியம்.  உடல் நோய்வாய்ப்படுவது போல் மனமும் நோய் வாய்ப்படலாம். மூளையின் சில பகுதிகளில் இருக்கும் நம் ஞாபகங்கள், உணர்ச்சிகள், எண்ணங்கள் ஆகியவற்றை தான் நாம் மனம் என்று கூறுகிறோம்.

காரணங்கள் : மனநோய் ஏற்படுவதற்கு மரபு முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றும் நம் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், சூழ்நிலை மாற்றங்களினால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையும் முக்கிய காரணங்களாகிறது. மனநோய் யாருக்கு    வேண்டுமானாலும் வரலாம். அது பில்லி,  சூனியம், செய்வினை, பேய் போன்றவற்றால் ஏற்படுவது அல்ல.

வகைகள் : பயம், பதட்டம், மனச்சோர்வு, மன எழுச்சி, மனச்சிதைவு, எண்ண சுழற்சி, போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆவது, தூக்கமின்மை போன்றவை மனநல பாதிப்புகளின் சில வகைகள்.

சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் மட்டும் சுமார் 5 கோடி பேர் மனச்சோர்வு என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறது. இது நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் ஆகும்.
மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட நபரிடம் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும். கவலை, நாட்டமின்மை, உடல் சோர்வு, தூக்கம் மற்றும் பசியில் மாற்றம், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, கவனமின்மை, தற்கொலை எண்ணம். இத்தகைய அறிகுறிகளுடன் நமக்குத் தெரிந்தவர் யாரும் இருந்தால் அவரை உடனடியாக ஒரு மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

மனச்சோர்வை ஆரம்பத்திலேயே கண்டறிவதும் சிகிச்சை அளிப்பதும் முக்கியம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து உளவியல் ஆலோசனைகள் முதல் மருந்துகள் வரை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். மருத்துவரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட காலத்திற்கு மருந்துகள் சரியாக எடுத்துக் கொண்டால் மனச்சோர்வில் இருந்து முழுவதுமாக குணமாகலாம்.

மனம் நலமுடன் இருக்க தினமும் குறைந்த பட்சம் 6 முதல் 8 மணி நேர தூக்கம் மிக அவசியம். உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா, தியானம், ஆரோக்கியமான உணவு, போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பது ஆகியவையும் மன நலமுடன் வாழ அவசியமாகும்.
          
நன்றி
Dr.நிஷாந்த்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்