கோத்தகிரி நேரு பூங்காவில் 9_வது காய்கறி கண்காட்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 6 மே 2017      நீலகிரி
6ooty-1a

கோத்தகிரி நேரு பூங்காவில் 9_வது காய்கறி கண்காட்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார்.

முதல் நிகழ்ச்சி

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தாண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 9_வது காய்கறி கண்காட்சியுடன் நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

காய்கறி உருவங்கள்

அதனைத்தொடர்ந்து  நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பல வண்ண குடை மிளகாய்களைக் கொண்டு பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி கப்பல். கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளினால் வடிவமைக்கப்பட்டிருந்த கரடி பொம்மை, திண்டுக்கல் மாவட்டம் சார்பில் காய்களால் வடிவமைக்கப்பட்ட விவசாய குடும்ப உருவமைப்பு, மதுரை மாவட்டம் சார்பில் காய்கறிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளையுடன் வீரன், சேலம் மாவட்டம் சார்பில் விலங்குகள் உருவ அமைப்பு, சேலம், திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மான் மற்றும் கங்காரு உள்ளிட்ட வன விலங்குகள் உருவமைப்பு, சிவகங்கை மாவட்டம் சார்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியார், தேனி மாவட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த எருது உருவமைப்பு மற்றும் ஐலேண்ட் அறக்கட்டளை, கிரீன்டெக் நிறுவனம் சார்பில் தெளிப்பு நீர் பாசன கருவிகள், பிஎஸ்என்எல், பயோரேச்சர் நிறுவனம் சார்பில் இயற்கை உரங்கள் என 20_க்கும் மேல் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டார்.                                                 
அமைச்சருடன் சுற்றுலா பண்பாடு துறை அரசு முதன்மை செயலர் அபூர்வ வர்மா, சுற்றுலாத்துறை ஆணையர் வெ.பழனிக்குமார், மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ஏ.ராமு, ஆவின் தலைவர் அ.மில்லர், முன்னாள் தாட்கோ தலைவர் எஸ்.கலைச்செல்வன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் தேனாடு லட்சுமணன், கோட்டாட்சியர் கீதாபிரியா, தோட்டக்கலை இணை இயக்குநர் மணி, துணை இயக்குநர்கள் சிவசுப்பிரமணியம், உமாராணி, சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் இமயவர்மன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன்,  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பா.ராஜகோபால், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி நரசிம்மன், ஜெயபிரகாஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர் சித்ரா, ஷிபிலா மேரி, தோட்டக்கலை அலுவலர்கள் சந்திரன், ராதாகிருஷ்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

8 சுழற்கோப்பைகள்

காய்கறி கண்காட்சியை காண வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் கண்காட்சி நடைபெறும் இரண்டு நாட்களிலும் பரத நாட்டியம், நடன நிகழ்ச்சிகளும், மேஷிக் ஷோ போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. காய்கறி கண்காட்சியின் நிறைவு நாளான இன்று(7_ந் தேதி) மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் காய்கறி காட்சியில் சிறந்த காய்கறிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 8 சுழற்கோப்பைகளும், 12 முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளும், 25 சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: