ஊட்டிக்கு ஏப்ரல்,மே மாதங்களில் 11.20 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      நீலகிரி

ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டிக்கு 11.20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்தாண்டை காட்டிலும் ஒரு லட்சம் பேர் அதிகமாகும்.

பல்லாயிரக்கணக்கான பயணிகள்

உலக சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமவெளிப்பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பத்தின் தாக்குதலிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வகையிலும், இக்கால காலகட்டத்தில் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டிருப்பதாலும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிந்தனர். ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம்,  தேயிலை பூங்கா போன்ற சுற்றுலா மையங்கள் இருந்தாலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை தாவரவியல் பூங்காவிற்கு வருவதை வைத்துத்தான் கணக்கிடப்படுகிறது. இங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கென்றே தனி புத்தகம் வைத்து கணக்கிடப்படுகிறது. இப்புத்தகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் விவரம் சேகரிக்கப்பட்டு எழுதப்படுவதால் ஊட்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் இதன் மூலம் கணக்கிட முடிகிறது.

31-ந் தேதி நிறைவு

கோடைகாலத்தில் ஊட்டி உட்பட நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கண்காட்சி, பழக்கண்காட்சிகள் நடத்தப்பட்டன. அத்துடன் சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், ஆதிவாசிகளின் பாரம்பரிய நடனம், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தாண்டு கோடை விழா நிகழ்ச்சிகள் மே மாதம் 6_ந் தேதி துவங்கி 31_ந் தேதியுடன் நிறைவுபெற்றது.

தாவரவியல் பூங்கா

இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 752 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 7 லட்சத்து 12 ஆயிரத்து 957 சுற்றுலாப் பயணிகளும் என மொத்தம்  11 லட்சத்து 19 ஆயிரத்து 709 பேர் வருகை தந்து பல வண்ணமலர்களையும், இயற்கையையும் கண்டு ரசித்துள்ளனர்.  இது கடந்தாண்டை காட்டிலும் சுமார் ஒரு லட்சம் பேர் அதிகமாகும்.

ஊட்டி அரசு ரோஜா பூங்காவிற்கு ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 100 பேரும், மே மாதத்தில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 105 பேரும் என இரண்டு மாதத்தில் மொத்தம் 4 லட்சத்து 96 ஆயிரத்து 205 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.                
குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு ஏப்ரல் மாதத்தில் 86 ஆயிரத்து 554 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 891 பேரும் என இரண்டு மாதத்தில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 445 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். தொட்டபெட்டாவில் புதிதாக துவங்கப்பட்டுள்ள தேயிலை பூங்காவிற்கு ஏப்ரல் மாதத்தில் 9,700 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 16,004 சுற்றுலாப் பயணிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 707 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
                                 வருகை குறைந்தது
சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நாள்தோறும் வாகன நெரிசலில் சிக்கித்தவித்து, திருவிழாக்கோலம் பூண்டிருந்த ஊட்டி நகரம், தற்போது ஜூன் மாதம் துவங்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து நகரமே களையிழந்து காணப்படுகிறது.   

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து