முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவல்ல...!

திங்கட்கிழமை, 5 ஜூன் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்.

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் 10 ஆண்டுகள் வீதம் மனிதனுடைய பூரண ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்று கணித்துள்ளார்கள். 60 வயதில் உக்ரரத சாந்தியும் 70 வயதில் பீமரத சாந்தியும் 80 வயதில் விஜயரத சாந்தியும் செய்து அந்தந்த வயதில் ஏற்படும் கண்டங்களில் இருந்து தப்பித்து வாழலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால், இவ்வாறு பரிகாரம் செய்தால் மட்டுமே மனதில் மகிழ்ச்சியும் சாந்தியும் முழுமையான அளவில் கிடைக்குமா? அறுபது வயது கடந்தவர்களெல்லாம் தனக்கு முதுமை வந்து விட்டதாகக் கருதி மனதளவில் தளர்ச்சி அடைவதால் உடலும் தளர்ச்சி அடைகிறது. நமக்கு வயதாகி விட்டது. நாம் ஓய்வு பெற்றுவிட்டோம் என்ற எண்ணமே பலரை முடக்கிப் போட்டு விடுகிறது. அறுபதைக் கடந்தாலும் பொதுப்பணி, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு இயங்கிக் கொண்டே இருந்தாலும் முதுமையும் பொலிவு பெறும். கவலைகள், மனச் சோர்வு, எதிர்மறைச் சிந்தனைகள், தீய எண்ணங்கள் இல்லாவிடில் முதுமை விலகி ஓடிவிடும். ஒழுக்கம், கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உணவுமுறை, தன்னுடன் உள்ளோரிடம் அன்பு பாசம் வளர்த்துக் கொண்டால் முதுமைக்கு விடை கொடுத்து விடலாம்.

பெரிய புராணத்தில் திருநீல கண்டருக்கும், அவர் மனைவிக்கும் வடிவுறு மூப்பு வந்தது என்று சேக்கிழார் பெருமான் கூறுகிறார். மூப்பு என்றால் முதுமை. அழகு இளமையில் இருக்கும் முதுமையில் இராது என்றுதான் நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சேக்கிழாரோ மூப்பில் அழகு என்றார். வாழைக்காயை விட வாழைப்பழம் அழகானது. மாங்காயை விட மாம்பழம் அழகானது. காந்தியடிகள் சிறுவயதில் உள்ள புகைப்படத்தை விட முதுமையில் பொக்கை வாயராக உள்ள படமே அழகாக உள்ளது. சில கிழங்கள் அழகாயில்லை என்றால் நன்றாகப் பழுக்கவில்லை. வெம்பல் என்று பொருள் என்று வாரியார் சுவாமிகள் கூறுவார். வழுக்கை என்றால் வயதாகிவிட்டது என்பது அர்த்தமில்லை. இளமைக்குத்தான் வழுக்கை என்று பெயர். இளமையான தேங்காயைத்தானே வழுக்கை என்று கூறுகிறோம்.

முதுமை என்பது ஒரு பருவ மாற்றம் தான்
பாலையாம் தன்மை போய்
பாலனாம் தன்மை போய்
காளையாம் தன்மை போய்
காமுறு இளமை போய்
மேலும் இவ்வியல்பினாலே
மேல் வரும் மூப்புமாகி என்று குண்டலகேசி கூறுகிறது.

அதனால் இளமைக்காலத்திலேயே அடுத்து வரும் முதுமைக் காலத்திற்காக திட்டமிட்டு, திட்டமிட்டபடி உழைத்தால் அது நமது முதுமையின் சோர்வை விரட்டி விடும். கழுகு தன் அலகாலும், நகத்தாலும் மாமிசத்தைக் கிழித்து உண்பதால் அதன் அலகும், நகமும் பலவீனமடைந்து விடும். கழுகு தன் 40 வயதில் ஏதாவது மலை உச்சிக்குச் சென்று அமர்ந்து தனது அலகால் கால் நகங்களை வெட்டி எடுக்கும். பின்பு தன் அலகை கல்லில் மோதி உடைக்கும். 5 மாதம் மலை உச்சியில் இருந்து அதன் நகம், அலகு இவை மீண்டும் வளர்ந்தவுடன் புதிய பொலிவோடு, வலிவோடு இரைதேடி அடுத்து 30 ஆண்டுகள் வாழும். ஒரு பறவையே தன் வாழ்க்கையை இரண்டாகப் பிரித்து திட்டமிட்டு வாழும் போது, ஆறறிவு படைத்த மனிதன் தன் இளமைக்காலத்தில் அதைவிட சிறப்பாகத் திட்டமிட்டு வாழ வேண்டாமா? அப்படித் திட்டமிட்டு வாழ்க்கை நடத்தினால் முதுமை என்னும் சோர்வு நோயைத் துரத்தி அடிக்கலாம் தானே.

ராக்பெல்லர் தனது முதுமைக்காலத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள வாலிபன் நீங்கள் வேண்டிய அளவு சம்பாதித்து விட்டீர்கள். இந்த முதுமையில் ஓய்வு எடுக்காமல் இன்னும் ஏன் பறந்து பறந்து சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டான். அப்போது ராக்பெல்லர் இந்த விமானம் மேலே பறக்க ஆரம்பித்து விட்டதே, இதன் இஞ்சினை நிறுத்திவிடலாமா என்றார். முடியாது என்றான் வாலிபன். அதுபோல் நாம் உழைப்பதை வாழ்க்கையின் எந்த உயரத்துக்கு போனாலும் எந்த வயதிலும் நிறுத்தமுடியாது. நிறுத்தவும் கூடாது என்றார்.

உதடு பிரிந்தால் ஓசை
இமை பிரிந்தால் பார்வை
கரு பிரிந்தால் உயிர்
பணியிலிருந்து பிரிந்தால் ஓய்வு ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல.

அது ஒரு அலுவலக பயணத்தின் பணி நிறைவு மட்டுமே. அதற்குப்பின் வாழ்க்கையின் அடுத்த பக்கத்தின் ஆரம்பம். கிரிக்கெட் விளையாட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடுவதைப் போல. இங்கிலாந்தில் 65 ஆண்டுகளாக மகாராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 91-வது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.

அங்கே வயதின் முதுமை தெரியவில்லை. மனதின் இளமைதான் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து