ஊட்டி தேவி கருமாரியம்மன் திருக்கோவிலில்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      நீலகிரி

ஊட்டி தேவி கருமாரியம்மன் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது.

காப்பு கட்டுதல்

ஊட்டி பிங்கர்போஸ்ட், பெரியார் நகர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பிரத்தியங்கரா தேவி, அருள்மிகு சூலினி துர்க்கையம்மன், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் திருநெறிய தெய்வத்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் 5_ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. அதனையொட்டி இன்று(3_ந் தேதி) காலை 9 மணிக்கு மேல் விநாயகர் வேள்வி, மதியம் 2.30 மணிக்கு தீர்த்தக்குடங்கள் மற்றும் முளைப்பாளிகை எடுத்துவருதலும், மாலை 4 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர்வழிபாடு, முளைப்பாலிகையிடுதல், காப்புக்கட்டுதல், திருவருள் சக்திகளை திருக்குடத்தில் எழுந்தருளச் செய்தல், திருக்குடங்கள் யாகசாலைக்கு எடுத்துவரப்படுதல், மாலை 6 மணிக்கு முதலாம் கால வேள்வி பூஜையும், 4_ந் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சியும், 9.30 மணிக்கு மேல் திருமஞ்சன அபிஷேகமும், 10.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையம், மதியம் 1 மணிக்கு மேல் விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மேல் மூன்றாம் கால வேள்வி பூஜையும், இரவு 8 மணிக்கு எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருப்பள்ளி எழுச்சி

5_ந் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி, மூலமூர்த்திக்கு காப்பு கட்டுதல், 7 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜையும், 9 மணிக்கு திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னை தேவி கருமாரியம்மனுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார பூஜையும் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழாவில் ஆன்மீக பெரியோர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு தேவி கருமாரியம்மன் சித்தர் பீடம் தவத்திரு சிவாசாமி அடிகளார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து