விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கலெக்;டர் நடராஜன் தலைமயில் பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      ராமநாதபுரம்
rmd collecer news

ராமநாதபுரம்,- விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு, நுண்ணீர் பாசனம் மற்றும் கூட்டுப்பண்ணையம் தொடர்பான பயிற்சி கலெக்டர் முனைவர் ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் (கிரிஷி கல்யாண் அபியான்) திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்பு, நுண்ணீர் பாசனம் மற்றும் கூட்டுப்பண்ணையம் ஆகியவை தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி மாவட்டகலெக்டர் முனைவர் ச.நடராஜன்; தலைமையில் நடைபெற்றது.  அப்போது அவர் பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு வேளாண்மை நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளின் வருமானத்தினை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் மாவட்டத்தில் உள்ள 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமங்களில் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ்  வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை நூறு சதவீதம் முழுமையாக நிறைவேற்றிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 வேளாண்மைப் பணிகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தினை அதிகரித்திட முடியும்.  குறிப்பாக நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் குறைந்த அளவிலான தண்ணீரில் அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.  அதேபோல கூட்டுப்பண்ணையின் திட்டத்தின் கீழ் வேளாண்மை, தேனீ வளர்ப்பு, களான் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என ஓரே இடத்தில் பல்வேறு விதமான வேளாண்மைப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதன் மூலம் அதிக இலாபம் பெறலாம்.  இதுதவிர, விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நலனுக்காக நிலக்கடலை விதைகள், தென்னங்கன்றுகள், பழ மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.  அந்தவகையில், இன்றைய தினம் நடைபெறும் இந்த பயிற்சியினை  விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார். 
 இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பொ.ராஜா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ஆர்.சீனிவாசன், கடல் உவர் ஆராய்ச்சி மைய பேராசிரியர் முனைவர்.ந.சாத்தையா, உழவர் பயிற்சி மைய துணை இயக்குநர் கி.வெங்கடேசன், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ச.கவிதா உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து