முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் - அவுட்டுகள், பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்: அ.தி.மு.க.வினருக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் (பேனர்) வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீ்ர் செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

நினைவூட்டிய ஜெயலலிதா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகத் தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் மனம் அறிந்து, அவர்களின் தேவையை உணர்ந்து மக்களுக்காக பணியாற்றுவதுதான் அ.தி.மு.க. உடன்பிறப்புகளின் தலையாய கடமையாக இருந்திடல் வேண்டும். இந்தக் கருத்தினை கட்டளையாகவும், வேண்டுகோளாகவும் பல நேரங்களில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவூட்டி வந்திருக்கின்றார். ஜெயலலிதாவின் நல்லாசியோடு அரசியல் பணியாற்றி வரும் நாங்களும் இந்த வேண்டுகோளை உடன்பிறப்புகளிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம்.

பாதிப்புக்குள்ளாகும் மக்கள்

அ.தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கோ, கழகத்தினர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை அன்புகூர்ந்து நிறுத்தி விட வேண்டும் என்று அ.தி.மு.க. உடன்பிறப்புகள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் அ.தி.மு.க.வினர் ஈடுபடவே கூடாது. ஒரு சிலர் ஆர்வம் மிகுதியாலும், விளைவுகளை அறியாமலும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்தி வரும் போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

முற்றிலும் தவிர்க்க வேண்டுகோள்

எனவே, எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் (பேனர்) வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இளம்பெண் சுபாஸ்ரீ உயிரிழப்பு சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. மேலும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து