முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 14 - ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 30 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14 - ந் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால்சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பஸ்,ரெயில்,விமானசேவைகள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ளன. அதே நேரம் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே உள்ள சமுதாய நல கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே  செல்கிறார்கள். ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்வதால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதை தடுத்து நிறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவ்வாறு எல்லை தாண்டி செல்பவர்களை பிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவும் உத்தரவு வெளியானது. இந்த நிலையில், மாநிலங்களை விட்டு மக்கள் இடம்பெயராமல் இருக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில எல்லைகளையும் மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஏப்ரல் 14 - ம் தேதிக்கு பிறகும் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற வதந்தியை மறுத்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றார். இது ஒரு நல்ல செய்தி என்றாலும் கூட பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். பல ஊர்களில் வழக்கமான நாட்களில் அலைவது போல் மக்கள் தெருக்களில் அலைகிறார்கள். இன்னும் பலர் முகக்கவசம் அணிவதே இல்லை. எவ்வளவு தான் எடுத்துச்சொன்னாலும் சில முதியவர்கள் இன்னும் தெருக்களில் அலைகிறார்கள். அவர்களின் கால்களில் விழுந்து சிலஇளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். சென்னையில் ஒரு போலீஸ்காரர் பொதுமக்களின் கால்களில் விழுந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆனால் சில போலீசார் பொதுமக்கள் மீது லத்தியை பயன்படுத்துகிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு மூத்த காவல் ஆணையர், லத்தி வேண்டாம், புத்தியை தீட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று கூறிஉள்ளார். இது ஒன்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையல்ல. நோய் பிரச்சனை ஆகவே லத்தி வேண்டாம் என்றும் அந்த அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். 144 தடை அமலில் இருப்பதால் நேற்று பல திருமணங்கள் தமிழகத்தில் எளிமையாக கோவில்களில் நடைபெற்றன. பொதுமக்கள் இப்படி விழிப்புணர்வோடு இருந்தால் விரைவில் நல்லசெய்தி வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து