ரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      உலகம்
World Health Organization 2020 08 02

Source: provided

நியூயார்க் : உலகத்தின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே உலகமே அஞ்சி நடுங்குகிறது. இந்த வைரசின் பிடியில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கி தவிக்கின்றன.

கொரோனாவுக்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்றுதான் ஆயுதமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதனால்தான் இதுவரை வேறு எந்த தொற்று நோய்க்கும் இல்லாத அளவில், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷ்யாவில் அந்த நாட்டின் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன.

அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி பதிவு செய்யப்பட்டு விட்டது.  இந்தத் தகவலை வெளியிட்ட ரஷ்ய அதிபர் புடின், கொரோனா தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-வி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் திறம்பட செயல்படுகிறது.

இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இந்த தடுப்பூசி ஆற்றல்மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது என்றார். 

இந்த நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு  பாதுகாப்பு ஆய்வுகளை மிகக்கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.   அப்போது அவர் கூறுகையில், ரஷ்யாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.

தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்” என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து