முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை

வியாழக்கிழமை, 20 ஆகஸ்ட் 2020      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம் என ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான பயனற்ற சொத்துகளை விற்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 23 சொத்துகள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள சொத்துகள் என 50 சொத்துகளை விற்க திட்டமிட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.  அதை, எதிர்த்து ஆந்திர மாநில பா.ஜ.க. பிரமுகர் அமர்நாத் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு முதன்மை நீதிபதி மகேஸ்வரி மற்றும் நீதிபதி ரமே‌‌ஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது. கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் படி திருப்பதி தேவஸ்தானத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், கடந்த 1974-ம் ஆண்டு முதல் விற்கப்பட்ட சொத்துகளின் விவரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட கடந்த மே மாதம் 28-ம் தேதி முடிவு செய்யப்பட்டது. சொத்துகளை பாதுகாப்பதற்காக சிறப்பு குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.  தேவஸ்தானத்துக்கு சொந்தமான 50 சொத்துகளை விற்க கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மாநில அரசு கடந்த மே மாதம் 25-ம் தேதி புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இனி, கோவில் சொத்துகளை விற்கக் கூடாது என்ற முடிவை தேவஸ்தானம் எடுத்துள்ளது. இருப்பினும், பக்தர்களிடம் இருந்து பெற்ற சொத்துகள் குறித்து உரிய முடிவெடுக்கும் சுதந்திரம் தேவஸ்தானத்துக்கு உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து