முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுரையீரல் கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? டாக்டர் பிரேம் ஆனந்த் விளக்கம்

வியாழக்கிழமை, 11 நவம்பர் 2021      மருத்துவ பூமி
Image Unavailable

முதல் உலக நுரையீரல் கிருமி தொற்று தினம் 2009- ல் அனுசரிக்கப்பட்டது. இவ்வாண்டு 13-ம் உலக நுரையீரல் கிருமி தொற்று தினம் இன்று 12-ம் தேதி  உலகம் ழுமுவதும் அனுசரிக்கப்படுகிறது. நுரையீரல் பல வகை தொற்று கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்றவகை பல வகை நுரையீரல் கிருமி தொற்றை உண்டாக்குகிறது. உலகளவில் 2019-ம் ஆண்டு 25 லட்சம் உயிர்களை பரித்திருக்கிறது. அதில் 6,72,000 குழந்தைகள் ஆகும். உலகளவில் ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடமும், நிமோனியா தினம் அனுசரிப்பதின் மூலம் நிமோனியாவின் தாக்கம், மருத்துவ முறைகள், தடுப்பு முறைகள் பற்றி விழப்புணர்வு ஏற்படுத்த முடியும். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் நிமோனியாவினால் ஏற்படும் குழந்தைகளின் உயிரிழப்புக்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. 

ஐந்து வயதுற்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு முதல் காரணம் நுரையீரல்  கிருமி தொற்று ஆகும்.ஒவ்வொரு நிமிடமும் நுரையீரல் கிருமி தொற்றால் 2 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். மொத்த குழந்தைகள் உயிரிழப்பில் 10 சதவிகித உயிரிழப்புக்காரணம்   நுரையீரல் கிருமி தொற்றே ஆகும். இந்தியாவில் 2015-ல் மட்டும் 5 கோடி குழந்தைகள் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகளவில்  ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா நோயாளிகளில் 23 சதவிகிதம் இந்திய குழந்தைகள் ஆகும். ஏற்கனவே அதிகபடியாக இருக்கும் நிமோனியா நோய்களில் சில நிமோனியாவை இந்தியா சுகாரதாரத்துறை முயற்சியால் குறைந்து வந்தாலும் பன்றிக்காய்ச்சல், கொரோனா கிருமி போன்றவை பெரும் பாதிப்பை எற்படுத்துவது influenza மனிதகுலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பல வகை பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது. ஸ்டெரப்டோகாகஸ் நிமோனியா தான் அதிகபடியான நுரையீரல் கிருமி தொற்றை ஏற்படுத்துகிறது அதனை தொடர்ந்து மைகோப்லாஸ்மா நிமோனியா,  ஈமோபிளஸ் இன்புலுன்சா போன்ற பாக்டீரியாக்கள் அதிகப்படியான நுரையீரல் கிருமி தொற்றை ஏற்படுத்துகிறது.

மேலும் பாக்டீரியாக்களில் காசநோய் அதாவது மைக்கோ பாக்டீரியம் டீயூபர்குலே இந்தியாவில் பேரிழப்பை ஏற்படுத்துகிறது.  வைரஸ்களில் இன்புலுயன்ஸா, கொரோனா, ரெஸ்பிரேட்டரி, சின்;சியல் வைரஸ், பாராஇன்புலுயன்ஸா, அடினோ வைரஸ் போன்றவை நுரையீரலைத் தாக்குகிறது.  பூஞ்சைகளில் ஆஸ்பர்ஜிலஸ், நிமோஸிடில் காரிணி, காண்டிடா போன்றவை நுரையீரல் தொற்றை உண்டாக்குகிறது.

பெரும்பாலும் நிமோனியா காற்றின் மூலம்  அதாவது நோய் உள்ளவர்கள் இருமும் பொழுது அக்கிருமி சளிதுகள்கள் மூலம் மற்றவர்களுக்கு காற்றின் மூலம் அதை சுவாசிக்கும் பொழுது நுரையீரலுக்குள் சென்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைவருக்கும் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள  வயதினர், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று எளிதாக ஏற்படுத்தி நோயாகிறது.

நிமோனியாவால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் எதிர்ப்புரதச்சத்து குறைவாக இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் பாதிப்படைகின்றனர். சக்கரைநோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், எச்.ஐ.வி, ஏற்கனவே நுரையீரல் நோய் உள்ளவர்கள் இருதய நோய் உள்ளவர்கள் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறையும் மருந்துகள் உண்பவாகளுக்கு  நிமோனியா தாக்கம் எளிதாக உருவாகும்.

காய்ச்சல், உடல் சோர்வு, நெஞ்சுவலி, சளி,  சளியில் இரத்தம், மூச்சுத்திணறல் போன்றவை ஆகும். மற்றும் கிருமி தொற்று முறையான மருத்துவம் செய்யவிட்டால் மற்ற உறுப்புக்களான மூனை, சிறுநீரகம், போன்றவையை தாக்கி பல்வேறு அறிகுறிகள் உண்டாக்கும். நெஞ்சுபடம், சளிபரிசோதனை, இரத்தப்பரிசோதனை நீர்ப்பரிசோதனை மூலம் கண்டறியலாம். சளி, இரத்தம், சிறுநீர் போன்றவையில் கிருமி தொற்றை (கிருமியை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருந்தையும் கண்டறிய முடியும்).

பாதிப்பு உண்டாக்கிய கிருமியை கண்டறிவதன் மூலம் அதற்கு தகுந்த மருந்துகள் அதாவது ஆண்டிபாயாடிக், ஆண்டி வைரஸ், ஆண்டிபங்கல் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஒருவராம் முதல், இரண்டு வாரம் வரை  மேலும் (காச நோய்) கிருமிக்கு ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை மருத்துவம் தேவைப்படும்.

2018 -ல் மட்டும் உலகளவில், இந்நோயினால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு இலட்சம் உயிரிழப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 2016-ல் இந்தியாவில், இந்நோயினால் 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த உலக காசநோயாளிகளில் நான்கில் ஒருபங்கு இந்தியாவிலே உள்ளனர். 2016-ல் இந்தியாவில் மட்டும் காசநோய் 4 லட்சம் உயிரிழப்பை உண்டாக்கி இருக்கிறது.காசநோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனும் கிருமியினால் உருவாகிறது இக்கிருமியும் நோயுள்ளவர் இருமும் பொழுது, சளிதுகள்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. நெஞ்சு கபடம் சளி பரிசோதனை மூலம் கண்டறியலாம். காசநோய் மருத்துவம் ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை கொடுக்கப்படும். 

இன்புலுயன்சா நோயின் அறிகுறிகள் இருமல், காய்ச்சல், சளி, சளியில் இரத்தம் எடைகுறைதல், பசியின்மை போன்றவை ஆகும். இதுவும் ஒரு நுரையீரல் பெருந்தொற்றாகும்.  1918,  1957 - 58, 1968 - 1969, 2009 ஆகிய ஆண்டு உலகளவில் பெரும்பாதிப்பை உண்டாக்கியது.  2009  உலகளவில் பன்றிக்காய்ச்சலால்  28010 மக்கள் உயிரிழந்தனர்.  இந்தியாவில் 1833 மக்கள் உயிரிழந்தனர். 2009 -2010, 36,247 மக்கள் இக்கிருமியினால் பாதிக்கப்பட்டனர். பின்னர் இதன் பாதிப்பு ஒவ்வொரு வருடமும்; தொடர்ந்து  இந்தியாவில் இருந்து கொண்டே இருக்கிறது. 2012 - 2019 காலத்தில் மொத்தம் 138, 394 பேர் இந்த பன்றி காய்ச்சலால், பாதிக்கப்பட்டு, 9180 மக்கள்உயிரிழந்துள்ளனர். இதுவும் காற்றில் பரவி கொரோனா போல் நுரையீரல் தொற்றை உண்டாக்குகிறது. இருமல், சளி, மூச்சுத்திணறல், உடம்பு வலி போன்றவை இந்நோயின் அறிகுறியாகும். எனினும் இதற்கு தடுப்பூசிகள் மூலம் இதன் பாதிப்பை குறைக்க முடியும். தொண்டை சளி RT PCR எனும் பரிசோதனை மூலம் கண்டறிப்படுகிறது. நிமோனியாவில்  இருந்து நம்மை பாதுகாக்க தூய காற்றை சுவாசிக்க வேண்டும். முடிந்தளவு புகை, மாசுக்காற்று உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.  புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.  

ஒவ்வொரு நாட்டிலும், நாட்டிற்கு உள்ள தொற்று நோய்கள் ஏற்ப, தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.  சத்துமிக்க ஊட்டசத்து நிறைந்த உணவுகள் மூலம் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும். நடைபெயர்ச்சி, உடற்பயிற்சி செய்தல் மூலம் நுரையீரல், இதயம் செயல்பாடு மேம்படும். நீரழிவு நோய், இருதய நோய், உடல்பருமன், சிறுநீரக செயல்பாடு குறைதல், கல்லீரல் செயல்பாடு குறைதல் போன்றவை நுரையீரல் நோய்களை உண்டாக்க வாய்ப்புள்ளது.

ஆஸ்துமா,அலர்ஜிக் ரைனைடிஸ் உள்ளவர்கள், ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை கண்டறிந்து அதை தவிர்த்து கொள்வது மகத்தான முறையாகும். நுரையீரல் தொற்று நோய்களை தவிர்க்க மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

டாக்டர்  P. பிரேம் ஆனந்த், முதன்மை அலர்ஜி, ஆஸ்துமா, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் இணை பேராசிரியர் செல் : 9940903555

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து