முக்கிய செய்திகள்

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். போட்டியின்றி தேர்வு : அமைப்புச்செயலாளர் சி.பொன்னையன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
EPS-OPS 2021 07 23

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேற்று முறைப்படி அறிவித்தனர்.

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுக்கு ஓருமுறை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதா இருந்த போது 2014-ம் ஆண்டு கட்சி தேர்தல் நடந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் கட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி போனது. இந்த நிலையில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த 2-ம் தேதி கட்சி தலைமை வெளியிட்டது.

அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு முதலில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதன்பிறகு கிளை கழகம் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் வருகிற 13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு கடந்த 3 மற்றும் 4-ம் தேதிகளில் தலைமைக் கழகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாக இருந்து வேட்பு மனுக்களை வாங்கினார்கள். இதில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

மேலும் இவர்களது பெயரில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வேட்புமனு அளித்தனர். மேலும் சில நிர்வாகிகள் கட்சியில் தனக்கு செல்வாக்கு உள்ளது. நாங்கள் இந்த பதவிக்கு போட்டியிடுகிறோம் என்றும் வேட்பு மனு அளித்தனர். முதல் நாளான 3-ம் தேதி 154 மனுக்கள் வந்திருந்தது. 2-ம் நாளான 4-ம் தேதி 98 மனுக்கள் வந்தது. மொத்தம் வந்திருந்த 252 மனுக்களும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தொடர்ந்து 5 ஆண்டு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பித்தவராக இருக்க வேண்டும் என்பதால் அதை அடிப்படையாக வைத்து பரிசீலனை செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களை 15 பேர் முன் மொழிந்திருக்க வேண்டும். 15 பேர் வழி மொழிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த 30 பேரும் தொடர்ச்சியாக 5 ஆண்டு அ.தி.மு.க. உறப்பினராக இருந்திருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தது. எனவே இந்த 2 பதவிகளுக்கும் போட்டி ஏற்படாததால் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் அதே பதவிகளில் அமர உள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையர்களாக உள்ள அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முறைப்படி இதற்கான அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டனர். பின்னர், தலைமைக் கழகத்துக்கு வந்து சான்றிதழை பெற்றுக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.  

வெற்றிப் பெற்ற சான்றிதழை பெற்றவுடன் நேற்று மாலையே ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் முறையே அ.இ.அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக பதவியேற்றுக் கொண்டனர். பிறகு அவர்கள் வெற்றி சான்றிதழுடன் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர். இதையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து