முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் மண்டப திருப்பணிக்கு ராசிபுரத்து கற்கள்

சனிக்கிழமை, 14 மே 2022      ஆன்மிகம்
Meenashi 2022-05-14

Source: provided

ராசிபுரம் : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் திருப்பணிக்கு ராசிபுரம் பகுதியில் இருந்து ராட்சத கற்கள் வெட்டி எடுத்து நேற்று எடுத்துச் செல்லப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தை புதுப்பித்து தூண்கள், சிற்பங்கள் அமைக்க, பல்வேறு இடங்களில் கருங்கற்கள் எடுத்துவர ஆய்வு செய்யப்பட்டது.

இதில் நாமக்கல் மாவட்டம் ஆர்.பட்டணம் பகுதியில்தான் தரமான கல் கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறப்பான பணி என்பதால் ராசிபுரம் அடுத்த களரம்பள்ளி மலை அடிவாரப் பகுதியில் அரசின் ஆணையுடன் சுரங்கம் அமைத்து ஒரு லட்சம் கன அடி கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மதுரை அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு அனுப்பி வைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.

அங்கு, போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக் கற்கள் அமைக்கப்பட்டு, கோயில் புதுப்பிக்கும் பணிக்கு இக்கற்கள் பயன்படுத்தப்படும். இதற்கென தமிழக அரசு கடந்த 31.1.20-ல் ரூ.18.10 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டது. 

இதில் கற்கள் வெட்டி எடுக்கும் பணிக்கு ரூ. 6.40 கோடியும், கோவிலை வடிவமைக்க ரூ.11.70 கோடியும் செலவிடப்படும். வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயிலுக்கு இங்கிருந்து கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.பட்டணம் களரம்பள்ளியில் வெட்டி எடுக்கப்பட்ட  23 அடி உயரம் கொண்ட, 16 கல் தூண்களுக்கு தேவையான 60 டன் எடை கொண்ட ராட்சத கற்கள் 3 டாரஸ் லாரிகளில்  மதுரை கொண்டு செல்லப்பட்டது. மேலும் திருப்பணிக்கு தேவையான கற்கள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து