முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம்: இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து எழுதப்பட வேண்டும் : பெட்னா அமைப்பின் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      தமிழகம்
CM-3 2022 07 04

Source: provided

சென்னை : இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம் என்றும், இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான பெட்னா அமைப்பின் 35-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது, 

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் ஒட்டுமொத்தமான அமைப்பான - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான பெட்னா அமைப்பைச் சார்ந்த, அதன் அமைப்பாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் நீங்கள் செய்த உதவிகளை தமிழ்நாடு மறக்கவில்லை. ஏன் நானும் மறக்கவில்லை. 

பெட்னாவின் 35-வது ஆண்டு விழாவில் உலகத் தமிழ்ப் பீடம் விருதையும் அளிக்க இருக்கிறீர்கள். 2020-ம்  அண்டுக்கான உலகத் தமிழ்ப் பீட விருதை மறைந்த இலக்கியச் செம்மல் தமிழ்கோ  இளங்குமரனாருக்கும், 2021-ம் ஆண்டுக்கான விருதை மாபெரும் தமிழ்க்கவி ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்குவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதன் பரிசுத்தொகை 15,000 அமெரிக்க வெள்ளி,  அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய். இந்தச் சிறப்புக்குரிய விருது தகுதிசால் அறிஞர்களுக்கு தரப்பட இருக்கிறது.

உலகில் மூத்த இனமான தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.  உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஒரு இனம் உண்டென்றால் அது தமிழினம்தான்.  நம்முடைய இனம் ஒரு நிலத்தில், ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். 

எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அத்தகைய தாய்வீடாம் தமிழ்நாட்டில் இருந்து என்னுடைய வாழ்த்துகளை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நிலத்தின் தொன்மை என்பது ஏதோ பழம்பெருமையோ, இலக்கியக் கற்பனையோ மட்டுமல்ல, அது வரலாற்றுப் பூர்வமானது. இத்தகைய வரலாற்றை மீட்டெடுக்கும் காலத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மிக மிகப் பொருத்தமானது.  கீழடியில் கிடைத்த சான்றுகள்தான், இந்த வரலாற்று வழித்தடத்தை மீண்டும் புதுப்பித்திருக்கிறது. 

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு, அகழாய்வுகளும், முன்களப் புலஆய்வுப் பணிகளின் முடிவுகளும் உறுதி செய்யும்.  

இந்த இனத்தின் மொழியைக் காக்க தமிழ்க் காப்புப் போராட்டங்கள் அனைத்தையும் நடத்தியது திராவிட இயக்கம்தான்.  ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாட்டு அரசுத் துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ்மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஆட்சியாக, தி.மு.க.வின் ஆட்சி அமைந்திருக்கிறது. உலகளாவிய தமிழாட்சியை இங்கிருந்து நடத்தி வருகிறோம். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனப்பெயராக, இடப்பெயராக, மொழிப்பெயராக இருந்தது. இது ஓர் இயக்கத்தின் பெயராக கடந்த 100 ஆண்டு காலமாக இருக்கிறது. இன்று ஓர் அரசியல் தத்துவத்தின் பெயராக,  ஒரு கோட்பாட்டின் பெயராக இருக்கிறது.

இந்தத் தத்துவத்திற்கு எதிரானவர்கள், இந்தக் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், திராவிட இயக்கத்தையும் எதிர்க்கிறார்கள். இந்த ஆட்சியையும் எதிர்க்கிறார்கள். திராவிடம் என்ற சொல்லையும் எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்கள். இவர்களை மீறித்தான், இவர்களை எல்லாம் தாண்டித்தான் தமிழினம் வளர்ந்திருக்கிறது. எனவே இவர்களை புறந்தள்ளி நாம் வளர்வோம். 

தமிழகத்தில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். தமிழை, தமிழ்நாட்டை விட்டுவிடாதீர்கள். நாம் முன்னெடுக்க வேண்டிய இயக்கமானது தமிழால் இணைவோம் என்பதாகும். 

மதம் என்று நான் சொல்லும்போது, யாருடைய இறைநம்பிக்கையையும் நான் சொல்லவில்லை. இறைநம்பிக்கை என்பது அவரவர் சிந்தனை. விருப்பம். உரிமை. அதில் ஒருநாளும் தலையிடமாட்டோம். அதே நேரத்தில், தமிழர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக மதத்தைப் பயன்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். 

சாதியால், மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு, நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!