முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
Stalin 2022 01 28

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அரியலுார் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம். இந்த மாவட்டத்தில்  கலிங்கச் சிற்பங்கள், மாளிகை மேடு, யானை சுதை சிற்பம், இரட்டைக் கோயில் என்று எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள்.   கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம் இது.  அரியலூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கப் பெறும் புதைபடிவங்கள் கொண்டு அருங்காட்சியகம் ஒன்று வாரணவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 10 கோடி மதிப்பிலான புதைபடிவப் பூங்கா அமைப்பதற்காகவும், வாரணவாசி அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காகவும் சுற்றுச்சுவர் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெறுகின்றது.  வாரணவாசி கிராமத்தில் உள்ள 120 ஏக்கர் நிலப்பகுதியினைப் (களர் நிலப்பரப்பு) பாதுகாத்திட, பாதுகாப்புக் கொள்கை வெளியிட தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.  

தமிழ்நாட்டினுடைய வரலாற்றுக் கருவூலமான அரியலூரில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு, அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கென ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். 

அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழினுடைய தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கியிருக்கிறோம். 

அரியலூருக்கு இத்தனை சிறப்புகள் என்றால், அரியலூருக்கு அருகில் இருக்கக்கூடிய பெரம்பலூரும் ஏராளமான சிறப்புகளைப் பெற்றுள்ளது. ஒரு காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்ட இடம்தான் பெரம்பலூர். அழகிய மலைகளும், அதில் அரிய வகையான விலங்குகளும் இருந்த பகுதி இது. இப்பகுதியில்  கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள் சேதமாவதை தடுக்கும் பொருட்டு, சிமெண்ட் காரிடர் திட்டம் செயல்படுத்தப்படும்.  

மக்கள் தொண்டைத் தவிர மாற்றுச் சிந்தனை இல்லாத மக்கள் நல அரசாக தி.மு.க.  அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  பத்து ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.  அதனை உடனே நடத்தி விட முடியுமா என்ற மலைப்பு கூட எங்களுக்கு முதலில் இருந்தது. ஆனால் அத்தகைய பாதாளத்தில் இருந்து தமிழகத்தை பல்வேறு வகைகளில் மீட்டெடுத்து விட்டோம் என்பதுதான் உண்மை. 

போட்டி போட்டுக்கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு தமிழகத்திற்கு வருகிறது.  ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம்.  அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம்.  வேளாண்மை உற்பத்தி அதிகமாகி இருக்கிறது.  வேளாண் பாசனப் பரப்பு வசதி அதிகமாகி இருக்கிறது.  உயர்கல்வியிலும், பள்ளிக் கல்வியிலும் பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறோம்.    மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தித் தந்ததன் மூலமாக பெண்களுக்கு நிரந்தரமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறோம்.

பதினைந்து மாத காலத்தில் ஒன்றரை இலட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பாற்ற அனைத்தையும் செய்திருக்கிறோம்.  கொரோனாவை வென்று காட்டினோம்.  மழை- வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம்.

அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நம்மைவிட மக்கள்தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாநிலங்கள் கூட தொழில்வளர்ச்சியில் நமக்குக் கீழேதான் இருக்கிறது. 

தனது கையில் அதிகாரம் இருந்த போது,  கைகட்டி வேடிக்கை பார்த்து பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள். பேட்டிகள் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள்.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள்.  தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம்.

இப்படிச் சொல்லும் சிலருக்கு, இருக்கும் பதவி நிலைக்குமா என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது, கவலைப்படாதீர்கள். விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை அவர்களுக்கு இருக்க வேண்டும். தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடையத்தான் நமது ஆட்சியின் குறிக்கோள். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து