முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது : வரும் 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      தமிழகம்
Erode 2023 02 07

Source: provided

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், அ.தி.மு.க., தேமுதிக, நாம் தமிழர், உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றுடன் மனுத்தாக்கல் நிறைவு பெற்றது. இதையடுத்து வரும் 10-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. 

வரும் 27-ம் தேதி...

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு கடந்த 31-ம் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார், வேட்பாளர்களிடம் மனுக்களைப் பெற்று வந்தார். முதல் நாளில் 4 சுயேச்சை வேட்பாளர்களும், இரண்டாம் நாளில், தே.மு.தி.க வேட்பாளர் ச.ஆனந்த் உள்ளிட்ட 6 வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர். பிப்ரவரி 2-ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 10 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்...

இதன் தொடர்ச்சியாக, கடந்த 3-ம் தேதி, திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளர் சிவ பிரசாந்த், அதிமுக ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் செந்தில் முருகன் உட்பட 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 4-ம் தேதி 10 சுயேச்சை வேட்பாளர்களும், நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 59 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

60-க்கும் மேற்பட்டோர்...

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு  தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நேற்று (பிப்.7) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 60-க்கு மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (பிப்.8) நடக்கவுள்ளது. வரும் 10-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கவுள்ளது.

5 முனை போட்டி...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை 5 முனை போட்டி நிலவினாலும், தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ். தென்னரசுக்கும்தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து