முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      தமிழகம்
DGP 2023-05-04

Source: provided

சென்னை : ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:- 

 ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி கோவில் விழா குழுவால் மனு அளிக்கப்பட்டால் அதன் மீதான முடிவு 7 நாட்களுக்குள் விழாவுக்குழுவுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அப்படி 7 நாட்களில் அனுமதி வழங்கவோ, அனுமதி மறுக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் 8-ம் நாள் விழாக்குழு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம். 

விழாக் குழுவின் பொறுப்பான உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பாளர்கள், திருவிழாவிற்கு சம்பந்தப்பட்ட கலாசார நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுவதையும், ஆபாசமான காட்சிகள் நடனம் எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது. 

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண் கலைஞர்களின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் அவர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ, வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்தவோ கூடாது. கோவில்களில் இறை வழிபாட்டிற்காக இசைக்கப்படும் பாடல்கள் அல்லது இரட்டை அர்த்தப் பாடல்கள் இது போன்ற நிகழ்ச்சியில் இடம்பெறக் கூடாது. 

ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மது அல்லது போதைப்பொருள் எதுவும் விநியோகிக்கப்படக் கூடாது.   நிபந்தனைகள் ஏதேனும் மீறப்பட்டால், நிகழ்ச்சி அமைப்பாளர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் அவர்கள் மேல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். 

இந்த வழிகாட்டுதல்கள் குறித்து அந்தந்த மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் தங்களின் கீழ் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரிய 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கி, விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அந்த உத்தரவில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து