முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      தமிழகம்
EPS 2025-09-28

Source: provided

கரூர் : கரூரில் நேற்று முன்தினம் நடந்த கூட்ட நெரிசல் காரணமாக விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசும் விஜய்யும் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கரூரில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததையடுத்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை (ஞாயிற்றுக் கிழமை), கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களை நலம் விசாரித்து, ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’கரூரில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிக்கொண்டு இருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 40 பேர் இறந்துள்ளதாகவும், அரசு மருத்துவமனையில் 51 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 2 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த பொதுக்கூட்டம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஊடகத்தின் வாயிலாக கிடைக்கப்பட்ட தகவலில் அடிப்படையில் அங்கு மின்சார வீளக்குகள் அணைந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன் த.வெ.க. 4 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அங்கெல்லாம் நிறைய கூட்டம் வந்திருக்கிறது. அதேபோல் இங்கேயும் கூட்டம் வந்தது, அவற்றை எல்லாம் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.

கூட்டத்தின்போது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது தொலைக்காட்சியில் தெளிவாக தெரிந்தது. ஏற்கெனவே த.வெ.க. கூட்டங்கள் நடந்தபோதும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரியவில்லை. தொலைக்காட்சிகளில் பார்த்ததை வைத்துத்தான் நான் இதை குறிப்பிடுகிறேன்.

இந்த கட்சி மட்டுமல்ல அ.தி.மு.க. சார்பில் நான் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறேன். அதில்கூட காவல்துறை எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கவில்லை. மூன்று நான்கு மாவட்டங்களில் மட்டுமே பாதுகாப்பை முழுமையாக கொடுத்தார்கள், மற்ற இடங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை. காவலர்கள் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடவில்லை.

அதே நேரத்தில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களிலும், தி.மு.க. நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கான காவலர்களை பாதுகாப்புக்கு நியமிக்கிறார்கள். இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. எந்த கட்சி என்று பார்க்காமல் அரசும், காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அ.தி.மு.க. அரசு இருந்தபோது பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தன. அந்த போராட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் முழுமையான பாதுகாப்பை கொடுத்தோம். இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மற்ற கட்சியினர் கூட்டம் நடத்துவதே சிரமமாக உள்ளது. நீதிமன்றத்துக்கு சென்று அவர்கள் மூலம் அனுமதி பெற்றுத்தான் கூட்டம் நடத்தும் சூழல் உள்ளது. அப்படி சூழல் இருந்தும், முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசும் காவல் துறையும் முழுமையான பாதுகாப்பை கொடுப்பதில்லை. முறையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் தள்ளுமுள்ளு ஏற்படாமல் பார்த்திருக்கலாம், உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அதை கவனித்திருக்கலாம். அவர் 4 மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் எப்படி இருக்கிறது, என்னென்ன குறைபாடு இருக்கிறது, எதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்று அவர்களும் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்றவாறு முன்னேற்பாட்டோடு நடத்த வேண்டும். எல்லாமே விலை மதிக்க முடியாத உயிர்கள். ஒரு கட்சியின் பாதுகாப்பை நம்பி, அரசை நம்பித்தான் மக்கள் இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்.

அரசாங்கமும், காவல் துறையும் பொதுக்கூடத்தில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கே குழுமியுள்ள கூடத்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை அறிவிக்கிறார்கள் என்றால் அந்த நேரத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும். பல மணி நேரம் கழித்து வந்து கூட்டத்தில் பேசும்போது, அதனால் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

முதல்வர்  நேரில் வந்து சந்திப்பது அவரது கடமை, அந்த அந்தஸ்தில் இருக்கிறார் அவர் வந்து செல்கிறார். எந்த அரசாங்கமாக இருந்தாலும் இப்படி வேகமாக செயல்பட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதைத்தான் இந்த அரசாங்கமும் செய்திருக்கிறது.

இந்த நேரத்தில் நான் யாரையும் இந்த நேரத்தில் குற்றம் சொல்ல விரும்பவில்லை. விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்திருக்கிறோம். இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. தமிழகத்தில் நம் சகோதர சகோதரிகளின் விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம். இது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

மிகுந்த வேதனையோடு இந்த கருத்தை சொல்கிறேன். அனைத்துக் கட்சி தலைவர்களும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் பல நிகழ்ச்சிகள், போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுபவம் இருக்கிறது. ஒரு தொகுதியில், ஒரு மாவட்டத்தில் எவ்வளவு கூட்டம் வரும் அதை எப்படி சமாளிப்பது என்பதில் அவர்களுக்கு அனுபவம் இருக்கிறது. அந்த அடிப்படையில் கூட்டம் நடக்கும்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் ஒழுங்குபடுத்திக்கொள்கிறார்கள். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து