முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசி உயர்வு - மின்சார வெட்டு - ஊழல் இவை தான் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

திருச்சி,மார்ச்.26 - தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு, மின்சார வெட்டு, உலகத்திலேயே நடக்காத அளவுக்கு தி.மு.க. அரசின் லஞ்ச ஊழல் ஆகிய பிரச்சினைகள்தான் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் என்று ஜெயலலிதா தனது பிரசாரத்தின்போது கணித்து மக்களிடம் எடுத்துக்கூறினார். 

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதனையொட்டி அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெயலலிதாவும் 18 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை நேற்றுமுன்தினத்தில் இருந்து துவக்கிவிட்டார்.

நேற்று இரண்டாம் நாளாக ஜெயலலிதா திருச்சியிலுள்ள கருமண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு பிரச்சாரத்தை துவக்கினார். திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்தும், பின்னர் தாம் போட்டியிடும் ஸ்ரீரெங்கம் தொகுதியைச் சேர்ந்த இனாம் குளத்தூர், ஆலயம்பட்டி புதூர் உள்பட மணப்பாறை வரை அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, 

இந்ததேர்தல் பெரும்ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்லாது தமிழக மக்கள் இந்த ஊழல் மிகுந்த ஆட்சியில் இருந்து நிரந்தர விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல்.  கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. இதனால் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்துக்கொண்டியிருக்கிறார்கள்.  அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் கடத்தல்,கொள்ளை, கொலைகள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது மணல் கொள்ள மூலம் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல் கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.280 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கான எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தாததால் மின்மிகை நாடு மின்வெட்டு மாநிலமாக மாறிவிட்டது. 

இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுவிட்டது.  தொழில் உற்பத்தியும் மிகவும் குறைந்துவிட்டது.,  ஜவுளித் தொழிலு  நசிந்துவிட்டது. தமிழக பொருளாதார வளர்ச்சி எப்போதும் குறைந்துவிட்டது.  இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.  தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கிஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.

தமிழக அரசின் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது கருணாநிதி குடும்பம். கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்த கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பணத்தை கோடி கோடியாக கருணாநிதி குடும்பம் சுரண்டிவிட்டது. காலாவதியான மருந்து விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படியெல்லாம் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மக்களின் அவலம், திண்டாட்டம் பெருகிவிட்டது. ஏழைமக்களின் நிலம் அடிமாட்டு விலைக்கு தி.மு.க கும்பல் வாங்கிவிட்டது. ரியல் எஸ்டேட் துறை கருணாநிதியின் குடும்பத்திடம் சிக்கித் தவிக்கிறது. திரைப்படத்துறை கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது. 

இந்த அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. அதற்காக கருணாநிதிர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரிசிக்கடத்தலை தடுக்கவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்சனை, காவிரி ஆற்றுப் பிரச்சனை, பாலாறு பிரச்சனையில் தமிழக உரிமையை கருணாநிதி விட்டுக்கொடுத்துவிட்டார். அவர் ஏழைகளின் பணத்தை சுருட்டுவதில்தான் கவநம் செலுத்தினார்.  நீதிபதிகள், வக்கீல்கள்,அரசு ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு எதையும் செய்யாத ஒரே அரசு கருணாநிதி அரசு. அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்த ஒரே அரசு கருணாநிதியின் அரசுதான். காவல்துறை கருணாநிதி குடும்பத்தின் ஏவல்துறையாக மாறிவிட்டது. இதனால் மக்களின் உரிமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பில்லை. 

இந்த ஆட்சியில் நாடு நலம் பெறவில்லை. கருணாநிதி குடும்பம்தான் வளம் பெற்றது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போய்விட்டது. ரெளடிக் கும்பலை அடக்க முடியவில்லை.  குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் ஆகிவிட்டது தமிழகம். அ.தி.மு.க ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி அடையும். கடந்த 5 ஆண்டுகாலமாக மைனாரிட்டி தி.மு.க அரசில் உள்ள பிரச்சனைகள் நீங்கள் நன்கு அறிவீர்கள். பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய்விட்டது. கருணாநிதி குடும்பத்தின் கையில் சிக்கி தமிழகம் சின்னாபின்னாமாகி விட்டது. 

மணப்பாறையில் குடிநீர்ப் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. சாலைகள் குண்டும் குழியுமாக சீரழிந்து கிடக்கிறது. இவை அனைத்தும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சீர் செய்து கொடுக்கப்படும். 

விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்படும்.அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்கும். 

தி.மு.கவினர் கொள்ளையடித்த பணம் உங்கள் பணம்தான். அதில் சில நூறுகளைக் கொடுத்து ஓட்டு வாங்க தி.மு.கவினர் வருவார்கள். அதெல்லாம்உங்கள் பணம்தான். உங்களின் மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள். தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் லஞ்ச ஊழல், மின்சார பற்றாக்குறையால் விவாசயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி அளவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்த 3 பிரச்சினைகளும்தான் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவை நிர்ணயம் செய்யும். அந்த முடிவு அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும்.  இவ்வாறு அவர் பேசினார். 

மணப்பாறையில் அ.தி.மு.க வேட்பாளர்கள் மணப்பாறை ஆர்.சந்திரசேகரன், முசிறி எஸ்.ஆர்.சிவபதி, மண்ணச்சநல்லூர், துறையூர் அ.தி.மு.க வேட்பாளர் இந்திரா காந்தி, திருவெறும்பூர் தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில்குமார், லால்குடி தே.மு.தி.க வேட்பாளர்ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony