முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஷ்கோடியில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

புதன்கிழமை, 30 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ராமேசுவரம், மே 31 - தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோவிலில் இலங்கை மன்னராக விபீஷணர் அறிவித்து அவருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.   ராமாயண காவியத்தில் இலங்கை மன்னர் ராவணன் சீதையை சிறை பிடித்து செல்கிறார். அப்போது ராவணனின் தம்பியான விபீஷணர், சீதையைச் சிறை பிடித்தது தவறு என்றும், அவரை உடனடியாக விடுவிக்குமாறு ராவணனிடம் கோரிக்கை வைக்கிறார். அவரது அறிவுரையை ஏற்காத ராவணன் ஆத்திரமடைந்து சீதையை விடுவிக்க முடியாது எனக் கூறி தம்பி விபீஷணரை அவமரியாதை செய்கிறார். இதன்பின்னர் விபீஷணர் அரசவையில் இருந்து வெளியேறி, அங்கிருந்து வான் வழியாக சில நம்பிக்கைக்குரிய அமைச்சர்களுடன் தனுஷ்கோடிக்கு வருகிறார்.

அங்கு சீதையை மீட்க, எப்படி இலங்கைக்கு செல்வது என்பது குறித்து ராமர், லெட்சுமணன், அனுமன் மற்றும் வானரச் சேனைகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

 அப்போது விபீஷணர் வருவதை பார்த்த லெட்சுமணர், அனுமன் ஆகியோர் துப்பு துலக்க விபீஷணர் வருவதாக சந்தேகமடைகின்றனர்.  உடனே ராமர், தன்னிடம் அடைக்கலம் தேடி வருவோருக்கு பாதுகாப்பு கொடுப்பது தான் தர்மம் எனக் கூறி, தம்பி லெட்சுமணரிடம் கடலில் நீர் எடுத்து வரும்படி கூறுகிறார். பின்னர், விபீஷணரை இலங்கை மன்னராக ராமர் அறிவித்து, அவருக்கு புனித கடல் நீரை ஊற்றி பட்டாபிஷேகம் செய்கிறார்.

ராமர் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டிய அந்த இடத்தில் தான் கோதண்ட ராமர் கோவில் நிறுவப்பட்டு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.)

 இந்த வரலாற்று காவியத்தின் நாளை நினைவு கூறும் விதமாக, தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் விபீஷணர் எழுந்தருளி உள்ளார். 

  பின்னர் ராமேசுவரம் திருக்கோவில் வேதவிற்பன்னர் ராம நாராயணன், ராமாயண காவியத்தின் நிகழ்வுகள் குறித்து வாசித்தார். இதனைதொடர்ந்து வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க, விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டினர். இதில் திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முன்னதாக செவ்வாய்கிழமை காலை ராமேசுவரம் கோவிலில் இருந்து ராமர், லெட்சுமணர் மற்றும் விபீஷணர் ஆகியோர் கோதண்ட ராமர் கோவிலுக்கு புறப்பாடாகியவுடன், திருக்கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கிருந்து ராமர், லெட்சுமணர், விபீஷணர் புறப்பாடாகி அன்று மாலைக்குள் திருக்கோவிலுக்கு வந்தவுடன் கோவில் நடை திறக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்