அண்ணா ஹசாரேதான் எங்கள் குரு: அரவிந்த் கேஜரிவால்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,செப்.21 - எங்களுடன் உறவை முறித்துக்கொண்டாலும் அண்ணா ஹசாரேதான் எங்களுக்கு வழிகாட்டி, குரு என்று அரசியல் ஆதரவு பிரிவை சேர்ந்த அரவிந்த் கேஜரிவால் உருக்கமாக தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அண்ணா ஹசாரே குழுவில் பிரிவு ஏற்பட்டுள்ளது. அரவிந்த் கேஜரிவால் பிரிவினர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதற்கு அண்ணா ஹசாரே பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு அரவிந்த் கேஜரிவால் குழுவினர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். ஹசாரேயின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை தருவதாகவும் ஹசாரேயின் இந்த அறிவிப்பை நம்ப முடியவில்லை என்றும் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். நாங்கள் தொடங்க உள்ள அரசியல் கட்சிக்கு ஹசாரேயின் கொள்கைகள்தான் அடித்தளமாக இருப்பதோடு எங்கள் குருவாக அவர் எப்போதும் இருப்பார் என்றும் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். நாங்கள் ஹசாரேயை மதிக்கிறோம். அவர்தான் எங்களுடைய தந்தை. ஹசாரேயின் புகைப்படம் மற்றும் அவரது பெயர் என்னுடைய இதயத்தில் பதிந்துள்ளது. அவருடைய ஆசியை தொடர்ந்து பெறுவோம். அவரை தொட்டு வணங்குகிறோம் என்று நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கேஜரிவால் தெரிவித்தார். அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கேஜரிவால் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்தார். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: