8 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

வேதாரண்யம் ஏப்.12 - கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் தாலுக்காவைச் சேர்ந்த வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதில் பலத்த காயமடைந்து நாகை மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் செளந்திரராஜன் (45), செல்வம் (30) மாரியப்பன் (28) விஜயகுமார் (30) ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர் இவர்கள் மாலை 5 மணியளவில் கோடியக்கரையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய கடற்எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப்பணி மேற்கொண்டு வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த 4 மீனவர்களை மூங்கில் கட்டை, கயிறு போன்றவற்றால் தாக்கி துப்பாக்கி முனையில் கடலில் குதிக்கும்படி கூறினர். தொடர்ந்து படகில் இருந்த வலை, டீசல், இரண்டு செல்போன்கள், ஐஸ்பாக்ஸ், திசைக்காட்டும்கருவி மற்றும் பிடித்திருந்த மீன்கள் உணவுப் பொருட்கள் போன்றவற்றை கடலில் வீசிவிட்டு இலங்கை கடற்படையினர் சென்று விட்டனர். இதையடுத்து இம்மீனவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் நள்ளிரவு 12 மணியளவில் வெள்ளப்பள்ளம் கரை திரும்பினர். காயமடைந்த மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், வெள்ளப்பள்ளம் ஊராட்சி வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அவருடைய தந்தை காளிமுத்து (45), கலைமணி (27) ரவிச்சந்திரன் (40) ரெங்ககையன் (38) ஆகியோரும் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் மாலை 6 மணியளவில் கோடியக்கரையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய கடற்எல்லைப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் உருட்டு கட்டை, இரும்பு பைப், கம்பு போன்றவற்றால் தாக்கினர்.

தொடர்ந்து படகில் இருந்த வலை, டீசல், ஐஸ்பாக்ஸ், திசைக்காட்டும் கருவி மற்றும் பிடித்திருந்த மீன்கள் போன்றவற்றை கடலில் வீசிவிட்டு வழக்கம் போல இலங்கை கடற்படையினர் சென்று விட்டனர். இந்த மீனவர்கள் கரைதிரும்புவதற்கு எரிபொருட்கள் இல்லாததால் நேற்று மதியம் சக மீனவர்கள் உதவியுடன் வானவன்மகாதேவி கரை திரும்பினர். பலத்த காயமடைந்த மீனவர்கள் நான்கு பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த மீனவர்களை நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் தலைஞாயிறு பாலசுப்பிரமணியன், நாகை தங்ககதிரவன், நாகை நகரச் செயலாளர் சந்திரமோகன், ஊராட்சி ஓன்றியக் குழுத்தலைவர் தமிழ்வாணன் வெள்ளப்பள்ளம் ஊராட்சி தலைவர் வனிதா நாகப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரேநாளில் வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவியைச் சேர்ந்த 8 மீனவர்களை தாக்கிய சம்பவம் நாகை, வேதாரண்யம் பகுதி மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: