முக்கிய செய்திகள்

மேற்குவங்கத் தேர்தல் - விறுவிறுப்பான வாக்குப்பதிவு

West Bengal Elect

புதுடெல்லி,ஏப்.28 - மேற்குவங்காளத்தில் நேற்று சட்டசபைக்கு 3-வது கட்ட தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மதியத்திற்குள் 40 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன. ஒரு சில சிறு வன்முறை சம்பவங்களை தவிர பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றது.மேற்குவங்காளத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 6 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. நேற்று 3-வது கட்டமாக 75 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவி நடைபெற்றது. வாக்கப்பதிவு விறுவிறுப்பாகவும் பெரும்பாலும் அமைதியாகவும் நடைபெற்றது நேற்று மதியத்திற்குள் 40 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டது. ஆண்களும் பெண்களும் ஆர்வமாக காலை 6 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நிற்கத்தொடங்கிவிட்டனர்.

நேற்று மதியத்திற்குள் கொல்கத்தா, வடக்கு, தெற்கு 24 பர்க்கானா மாவட்டங்களில் 39.72 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுனில் குமார் குப்தா தெரிவித்தார். ஒரு சில சிறு வன்முறை சம்பவங்களை தவிர மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது என்றும் குப்தா கூறினார். தெற்கு கொல்கத்தாவுக்கு உட்பட்ட கஸ்பா தொகுதியில் வாக்காளர்களை ஏற்றிச்சென்று ஒரு வாகனத்தை சமூக விரோதிகள் தாக்கினர். தெற்கு 24 பர்க்கானா மாவட்டத்தில் உள்ள ஹரோவில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். பாலிடெக்னிக் பள்ளி வாக்குச்சாவடியில் அரசியல் கட்சிகள் தொண்டர்களிடையே ஏற்பட்ட தகராறின்போது கூட்டத்தினர்களை கலைக்க போலீசார் லேசான தடி அடியை நடத்தினர் என்று குப்தா தெரிவித்தார். 

ஒரு சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததாகவும் அவைகள் உடனடியாக மாற்றப்பட்டதாகவும் தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. கொல்கத்தா மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் வடக்கு 34 பர்க்கானா மாவட்டத்தில் 33 தொகுதிகளிலும் தெற்கு 24 பர்க்கானா மாவட்டத்தில் 31 தொகுதிகளிலும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் மொத்தம் 479 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களின் தலைவிதியை ஒரு கோடியை 44 லட்சம் வாக்காளர்கள் நேற்று நிர்ணயம் செய்துள்ளனர். தலைவிதி எப்படி இருக்கும் என்பது வரும் மே மாதம் 13-ம் தேதி தெரியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: